Uncategorized|

மாபெரும் மக்கள் இயக்கமான திமுக-வின் 75வது பவள விழா!

தமிழர் உரிமை காக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டமைத்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, போராட்டமிகு இந்த பயணம் வரலாற்றுப் பெருவிழாவாகவும், கழகத்தின் பவள விழாவாகவும், கழக முப்பெரும் விழாவில் கடந்த 17/09/2024 அன்று கொண்டாடப்பட்டது.


அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலைக்கு புது வெளிச்சம் பாய்ச்சி, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிக் கொள்கை தமிழ்நாடு எங்கும் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையோடு செயல்படத் தொடங்கிய கழகம் இன்று பெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

கருப்பு சிவப்பு அரசியலின் எழுச்சி :

சென்னை – நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 17/09/2024 அன்று நடைபெற்ற திமுக-வின் 75வது முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 1966 ஆம் ஆண்டு என்னுடைய 13 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கி 53 ஆண்டுகள் இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான், இன்று பவள விழா காணும் கழகத்திற்கு நான் தலைவராக இருப்பது என்றும், கருப்பு சிவப்பு கொடியும், உடன்பிறப்புகளின் அரவணைப்பும், தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலும் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது என்று உரையாற்றினார்.

AI தொழில்நுட்பத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உரை :

பெரியாா் வடித்த கொள்கையையும், அண்ணா வகுத்த பாதையையும் என்னால் கட்டிக் காட்டப்பட்ட இனமான உணா்வையும் ஓங்கி ஒலிக்கச் செய்து, கம்பீரமாக கட்சியை ஆட்சிக் பொறுப்பில் அமரச் செய்த முக.ஸ்டாலினை எண்ணி மனது பெருமிதம் கொள்கிறது.
ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். அவா் கட்சிப் பணியில் 55 ஆண்டுகள் உழைத்து வருவதுடன், திராவிடச் செம்மலாய், நல்லுலகம் போற்றும் நாயகராய் விளங்குகிறாா்.


சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் பாதையில் கட்சியையும் ஆட்சியையும் மிகச்சிறப்பாக வழிநடத்துகிறாா். இனம், மொழி, சுயமரியாதையை கண்போல் காக்கும் அவரது கடமை உணா்வைக் கண்டு வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன் என கலைஞர் பேசுவது போன்ற காட்சி அனைவரையும் கவா்ந்தது.

பவள விழா ஆண்டின் விருது பெற்றவர்கள் :

திமுக பவள விழா ஆண்டின் சிறப்பாக நிகழாண்டு முதல், முதல்வர் “மு.க.ஸ்டாலின்” பெயரில் விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரில் முதல்முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருதை வழங்கி கௌரவித்தார் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
இந்த விழாவில் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதும், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருதும், எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருதும், அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு அண்ணா விருதும் வழங்கப்பட்டது.

நிர்வாகிகளுக்கு 1 இலட்சம் பண முடிப்பு :

இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் பண முடிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்தப் பண முடிப்பு கழகத் தலைவரும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.

வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிட மாண்புமிகு முதல்வர் சூளுரை :

அமெரிக்கப் பயணத்துக்குப் பின் தொண்டர்களின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றதாகவும், நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் – வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும் இந்த முப்பெரும் விழாவின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் முப்பெரும் விழாவில் சூளுரைத்தார்.

Comments are closed.

Close Search Window