குமரியிலிருந்து கிளம்பியது கருப்பு சிவப்பு இளைஞர் படை!
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் கடந்த 15-11-2023 அன்று தொடங்கி வைத்தார்.
8 ஆயிரத்து 647 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேர் 188 வாகனங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து சுமார் மூன்று லட்சம் பேரை சந்திக்க உள்ளனர்.
மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்:
இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு வரியாக தமிழக அரசு 25 ஆயிரம் கோடியை வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பிக் கொடுத்தது வெறும் 2 ஆயிரம் கோடி தான். மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு. மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மாநில உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், பைக் பிரச்சார பேரணியில் பங்கேற்பவர்கள் போர் வீரர்கள் போல் காட்சியளிக்கின்றனர். பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழக முழுவதும் மூன்று லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.” என்றார்.
பூட்டுக்கதை சொன்ன அமைச்சர்:
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். “ஒரு பூட்டு, சுத்தியல், சாவி இருந்தது. பூட்டின் தலையில் சுத்தியல் தட்டி தட்டி திறக்க முயற்சித்தது. ஆனால் பூட்டை திறக்க முடியவில்லை. சாவி சுலபமாக பூட்டை திறந்து விட்டது. இதை பார்த்த சுத்தியல் சாவியிடம் கேட்டது. நான் பலமாக இருக்கிறேன். பலமுறை பூட்டின் தலையில் அடித்தும் திறக்கவில்லை. நீ எளிதாக எப்படி திறந்தாய் என்று கேட்டது.
அதற்கு சாவி, நான் பூட்டின் இதயத்தை நேரடியாக தொட்டு விட்டேன் என்றது. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு, சாவி என்பது நமது திராவிட இயக்கம், நமது தலைவர், சுத்தியல் என்பது மத்திய அரசு. மத்திய அரசு தமிழ்நாட்டுக்குள் ஒவ்வொன்றையும் திணிக்க இடியாக இடிக்கிறது. என்னதான் திணித்தாலும் தமிழகத்திற்குள் நுழைய முடியாது.” என உதயநிதி தெரிவித்தார்.
கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள்:
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே தொடங்கி வைத்தோம் என்று தெரிவித்திருந்தார்.
கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்:
13 நாட்கள் – 234 தொகுதிகள் – 504 பிரச்சார மையங்கள் – 8,647 கிலோமீட்டர் என இலட்சோப இலட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றும், இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுன், பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகளை மீட்க உறுதியேற்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.