தமிழ்நாட்டிலுள்ள தென் மண்டலத்தின் நுழைவுப் பகுதியான திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தாராபுரத்திற்கு இடையே அமைந்துள்ள ஒரு அழகிய தொகுதியாகும்.


ஒட்டன்சத்திரம் தொகுதி ஒட்டன்சத்திரம் நகராட்சி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், கீரனூர் பேரூராட்சி மற்றும் 77 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது.


இத்தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. குறிப்பாக தற்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக உள்ள அர. சக்கரபாணி அவர்கள் தொடர்ந்து 6 முறை சட்டமன்றத்திற்கு ஒட்டன்சத்திரத்திலிருந்து தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெயர்

ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் உப்பிலியபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம், வர்த்தக ஆவணங்கள் (கிரையப் பத்திரம்) போன்றவற்றில் உப்பிலியபுரம் என்ற பெயரைக் காணமுடிகிறது. இங்கு பழமையான உப்புலியர் குடி வாழ்ந்தனர் இவர்கள் சிற்பக்கலை, போர், உவர் மண் உப்பு விளைவித்தல், விவசாயம், வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை செய்து வந்தனர், மருத்துவம் போன்ற துறைகளில் மிகவும் சிறந்து விளங்கினர்.

 

விவசாயம்

இங்கு முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,காய்கறிகள் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, கரும்பு, உள்ளிட்டவை பயிர் செய்யப் படுகின்றன.

காந்தி மார்க்கெட்

ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப் படுகின்றன. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய் இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகின்றன.

நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கொடைக்கானலுக்கு இங்கிருந்து வடகாடு , பாச்சலூர் ,தாண்டிக்குடி ,பண்ணைக்காடு வழியாக மலைப் பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ. தொலைவில் வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்) ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக நல்காசி எனும் பழம்பெயர் கொண்ட நங்காஞ்சி ஆறு விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து அருவியாக விழுந்து, வடகிழக்காக ஓடி இடையகோட்டை என்ற ஊருக்கு அருகில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நங்காஞ்சி ஆறு அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன் படுத்தப்படுகிறது.

சுற்றுலாத்தளம்

கொண்டறங்கி மலை

ஒட்டன்சத்திரத்திலிருந்து மூலனூர் செல்லும் வழியில் சுமார் 19.5 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது. வடக்கு எல்லையாக ஈரோடு மாவட்டமும், ஐ.வாடிப்பட்டி கிராமம் கிழக்கு எல்லையாகவும், தெற்கு எல்லையாக மண்டைவாடி கிராமமும், மேற்கு எல்லையாக கள்ளிமந்தையம் கிராமமும் உள்ளது செங்குத்தான கூம்பு வடிவத்தைக் கொண்டுள்ள மலை  சுமார் 1165.86 மீட்டர் (3825 அடி) உயரம் கொண்ட சிவபெருமான் அருள் பொழியும் ஒரு அற்புதமான பாறைக் கோயில் என்பதாகும்.

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில்

திண்டுக்கல்லிலிருந்து  பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோவில். மிகவும் பழமையான இந்த கோவில் பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக விளக்குகின்றது.

தலையூத்து அருவி

ஒட்டன்சத்திரத்திலிருந்து விருப்பாட்சி ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவியே தலையூத்து அருவி ஆகும். இது இயற்கையான வனப்பகுதியாகும். குழுவாக சென்றால் இயற்கையை ரசித்து இன்பமாக குளிக்கலாம். இயற்கையான சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.

பரப்பலாறு அணை

ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடி. மொத்த நீர்ப்பரப்பு 113.76 ஹெக்டேராகும்.

விடுதலை போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்

ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 10 நிமிட தூரத்திலுள்ள விருப்பாச்சி எனும் இடத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சிப்படைகளுக்கு தலைமையேற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்திய கோபால் நாயக்கரின் நினைவு மண்டபம் உள்ளது.

Close Search Window