சட்டமன்றத்தில் தனது கன்னிப் பேச்சு தொடங்கி, இன்று வரை பல உரைகள் நிகழ்த்தியுள்ள அர.சக்கரபாணி அவர்கள், அவை அனைத்திலும் ஒட்டன்சத்திரத்தின் உரிமைக் குரலாகவே உரக்க ஒலித்துள்ளார். திமுக தலைவர் டாக்டர். கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகளில், சட்டமன்றத்தில் பேசி, தொகுதிக்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தொகுதியின் முக்கிய தேவைகளான அரசு கலை கல்லூரி அமைத்தல், பரப்பலாறு அணையை தூர் வாருதல் போன்ற எண்ணற்ற கோரிக்கைகளை அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வந்துள்ளார். அப்படி, கடந்த ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த சில முக்கியமான கோரிக்கைகள் இதோ.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஒட்டன்சத்திரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, கன்னிப் பேச்சினைத் தொடங்குகின்றேன்.

 

இந்த நேரத்தில் எனது தொகுதி மக்களின் அவசிய அவசரத் தேவைகளை இந்த மாமன்றத்தின் மூலம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மாண்புமிகு முதல்வர் அவர்கள் 1989ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் எனது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நங்காஞ்சி நீர்த்தேக்கத் திட்டத்தை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதற்குப் பின் வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மேற்கண்ட நீர்த்தேக்கத் திட்டத்திற்குத் தேவையான பணத்தை ஒதுக்கீடு செய்யாமல் ஆமை வேகத்தில் நடத்தி வந்தது. அந்தத் திட்டம் விவசாயத் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்ட திட்டமாக கழக ஆட்சியின் போது துவக்கப்பட்டது.

 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் சுருக்கப்பட்டு, நடைபெற்ற வேலைகளிலும் பெருமளவு ஊழல் நடைபெற்று, செய்த வேலைகளிலும் பெருமளவு சீரழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்களும், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் மேற்கண்ட நங்காஞ்சி நீர்த்தேக்கத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும், ஊழல்களையும் கண்டுபிடிக்கும் வகையில் விசாரணையை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் அந்தத் திட்டம் சிறப்புடன் அமைந்திட தகுந்த நிதி ஒதுக்கி துரிதமாக வேலைகள் நடைபெற தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

அடுத்து எங்கள் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நல்லதங்காள் ஓடைத் திட்டம், திட்ட அளவிலேயே இருக்கிறது. அந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட ஏற்பாடுகள் செய்து எனது தொகுதி விவசாய மக்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்…

 

எனது தொகுதியில் வாழும் மக்களுக்கு போதிய சுகாதார வசதியில்லாததால், போதிய மருத்துவ வசதியில்லாததால், அவர்கள் மதுரை, பழனி, திண்டுக்கல் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அதனால் ஏற்படுகின்ற காலதாமதத்தால் உயிரிழப்புகள் மிக அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை ஒன்றை ஒட்டன்சத்திரம் நகருக்கு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

பழனி வட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம் வட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக முந்தைய அரசு அறிவித்தது. தற்பொழுது ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாடகைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றன. எனவே, அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு சார்பில் கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாகும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் வந்து, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உற்பத்தி அதிகமாகும் நேரங்களில் காய்கறிகளை இருப்பில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் சாய்கறிகள் அழுகுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே, அங்குள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, காய்கறிகளைப் பதப்படுத்துவதற்கு குளிர்சாதன வசதி கொண்ட கட்டிடம் ஒன்று கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். அதில் இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. ஒன்று ஒட்டன்சத்திரம், மற்றொன்று தொப்பம்பட்டி. இவற்றில், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் அரசு சார்பாகவோ அல்லது தனியார் சார்பாகவோ எந்த ஒரு தொழிற்சாலையுமே இல்லை. அதனால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களை தொழிலில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களையும், தொப்பம்பட்டி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களையும் கொண்டதாக உள்ளன. அதனால் இந்த இரண்டு ஒன்றியங்களையும் பிரித்து, கள்ளிமந்தயத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒட்டன்சத்திரம் வளர்ந்து வருகின்ற தகரமாகும். அங்கு போக்குவரத்து அதிகமாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அதனால் ஒட்டன்சத்திரத்திற்கு ஒரு புறவழிச்சாலை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள், தங்கள் வழக்குகள் சம்பந்தமாக திண்டுக்கல்லுக்கும் , பழனிக்கும் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால், ஒட்டன்சத்திரத்தில் உரிமையியல் நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதியில் வடகாடு என்ற மலைப்பிரதேசம் நிலமட்டத்திலிருந்து 20 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் அவைகளை ஒட்டன்சத்திரம் கால்தடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, அங்கு கால்நடை மருத்துவமனை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்கு நிரந்தரமான குடிநீர்த்திட்டம் ஒன்று கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்…

 

ஒட்டன்சத்திரத்திலிருந்து இடையகோட்டைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூருக்குச் செல்கின்ற மக்கள், இந்த நூற்றாண்டில் கூட, பேருந்தின் கூரை மீது ஏறிப் பயணம் செய்கின்ற சூழ்நிலை உள்ளது. அதனால் ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூருக்கு கூடுதலாக இரண்டு பேருந்துகள் விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

எனது தொகுதியில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதனால், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

அதேபோன்று, வாகரையிலிருந்து வடபருத்தியூர் செல்லும் சாலை, வெரியப்பூரிலிருந்து தேவசின்னாம்பட்டி வழியாக கேதையுறம்புக்குச் செல்லும் சாலை, வில்வாதம்பட்டியிலிருந்து கீரனூருக்குச் செல்லும் சாலை போன்ற சாலைகளையெல்லாம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒட்டன்சத்திரம் தொகுதியில் படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ளதால், அரசின் சார்பில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தொப்பம்பட்டி ஒன்றியத்தில் பழனியாண்டவர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான, சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் தரிசாக உள்ளது. அங்கு சிட்கோ மூலமாக ஒரு தொழிற்பேட்டை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதியில் வடகாடு மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் ஏற்பட்டால், ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் வடகாட்டில் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டு எனக்கு இந்த மாமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பளித்த துணைத் தலைவர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதியான ஒட்டன்சத்திரத்தில் அதிகமான மக்கள் கால்நடைத் தொழிலை முக்கியத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலே மிகப்பெரிய தயிர் மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டு, ஒட்டன்சத்திரத்திலே இயங்கி வருகின்றன. அந்தக் கடைகளின் மூலம் தயிர், வெண்ணெய் போன்ற பொருள்கள் வெளி மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் கால்நடைகள் அதிகமாக உள்ள எனது தொகுதியான ஒட்டன்சத்திரத்தில், வடகாடு, தேவத்தூர், சத்திரப்பட்டி, ஓடப்பட்டி போன்ற ஊர்களுக்கு எல்லாம் கால்நடை மருத்துவமனைகள் அமைக்க, அரசு மறுபரிசீலனை செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் வட்டம் கடந்த 9-1-1996 ல் பிரிக்கப்பட்டது. அந்த வட்டத்தில் ஒட்டன்சத்திரம், புலியூர் நத்தம், சின்னக்காம்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூர் ஆகிய 5 வருவாய் பிர்க்காக்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் சிவில் சம்பந்தமான வழக்குகளுக்காக பழனிக்கும், கிரிமினல் வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல்லுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்காக அவர்கள் 50 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நிதியாண்டில் நீதிமன்றங்கள் அமைக்க மீண்டும் மறுபரிசீலனை செய்வார்களா என்று நான் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய தொகுதியான ஒட்டன்சத்திரத்தில் இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்ற ஆண்டு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்திக் கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே எக்ஸ்ரே, ஸ்கேன் வசதிகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாமல் உள்ளன. எனவே, அவற்றை அமைத்துத் தர அரசு முயற்சி செய்யுமா என்று தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கே.ஆர்.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. முத்துநாயக்கன்பட்டி, மார்க்கம்பட்டி, கீரனூர் போன்ற ஊர்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதேபோன்று, ஓடைப்பட்டி, இடையகோட்டை, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பொருளூர், தொப்பம்பட்டி போன்ற ஊராட்சிகளில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. அங்கே படிக்கின்ற மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பாகத் தங்கும் விடுதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே , மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்து இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பாக அந்தத் தொகுதியில் மாணவர் தங்கும் விடுதி அமைக்க முன் வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவிரி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு கரூர் அருகே கட்டளை ரங்கநாதபுரத்தில் இருந்து வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு குடிநீர் கொண்டு வருகின்ற பணி ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்தப் பணியை விரைவில் முடித்து எப்பொழுது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்பதை அறிய விரும்புகிறேன். மேலும், ஏற்கெனவே அந்தக் குழாய்கள் அமைத்த இடங்களிலெல்லாம் சாலைகளை விரிவுபடுத்துகின்ற சமயத்திலே குழாய்கள் எல்லாம் சேதம் அடைந்திருக்கின்றன. அந்தக் குழாய்களை மீண்டும் பதிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து விரைவிலேயே மக்களுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வார்களா என்பதை தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ஒட்டன்சத்திரம் தொகுதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சேகரிக்கப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு வருகின்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான இடமோ அல்லது அரசாங்க நிலமோ ஏதும் இல்லை. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக நிதி ஒதுக்கி, தனியாரிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்தக் குப்பைகளைச் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2006-2011 ஆம் ஆண்டு, எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில், ஒட்டன்சத்திரம் தொகுதியிலே ஒரு தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அந்தத் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடத்தை சென்னையிலுள்ள சிட்கோ நிறுவன அதிகாரிகளும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனர். எனது ஒட்டன்சத்திரம் தொகுதியில், இடையகோட்டை அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 120 ஏக்கர் நிலத்தில் அரசு தொழிற்பேட்டை ஆரம்பிக்கலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அந்தப் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியிலே விரைவில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அங்கே எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. அங்குள்ள இடையகோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ளது. அங்கே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். உள் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான கட்டட வசதி இல்லை. அங்குள்ள மக்கள் மேல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டுமென்றால், ஒட்டன்சத்திரம் அல்லது திண்டுக்கல்லுக்கு, சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை உணர்ந்து தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்திலே இடையகோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு பொதுமக்கள் நலன் கருதி இடையகோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற சமயங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கிருக்கின்ற அரசு மருத்துவமனைக் கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்து, சிதிலமடைந்த கட்டடங்களாக இருக்கின்றன. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தச் சேதமடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டி, அங்கே போதுமான மருத்துவர்களை நியமித்து, வேண்டிய வசதிகளை ஏற்படுத்தித் தருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அவை முன்னவர் அவர்களிடத்திலே நான் சொல்லிக்கொள்வது, என்னுடைய தொகுதியைப் பொறுத்தவரையில் சுமார் 2,500 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நான் தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்றிருந்த சமயத்தில் 2,500 பேர் எங்களுக்கு ஓய்வூதியம் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். நான் அவர்கள் கொடுத்த மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் நேரிடையாகக் கொண்டுபோய் கொடுத்திருக்கின்றேன். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நீங்கள் அறிவுரை வழங்கி, தகுதியுள்ளவர்கள் யாருக்கேனும் முதியோர் ஓய்வூதியத் தொகை நிறுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. அர.சக்கரபாணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் தமிழ்நாட்டிற்கே பேசப்போகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தளவில், கூட்டுறவு வங்கிகளிலிருந்து விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். சிறு, குறு விவசாயிகள் என்று பாகுபாடு பாராமல், அனைத்து விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கென 1000 கோடி ரூபாய், 1200 கோடி ரூபாய் என்ற அளவிற்குத்தான் கூடுதலாகத் தேவைப்படும். ஆகவே, அதையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2, 3 ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, கடன்களைக் கட்ட முடியாமல் மிகவும் தவிக்கிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகள் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று பொருட்களை ஜப்தி செய்கின்றன. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வட்டியையாவது தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசை மாநில அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்… தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 1989-1990 ஆம் ஆண்டில் திரு.வி.பி.சிங் அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பிறகு 2008 ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியிலிருந்த மத்திய அரசால், விவசாயிகள் பெற்ற கடன்களுக்காக 74,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது நீங்கள் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறீர்கள். எனவே, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

திரு.அர.சக்கரபாணி : அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2006 வரை சுய நிதித் திட்டத்தின் கீழ் 2,20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அன்றைக்கு ஒரு குதிரைத் திறனுக்கு ரூ.250 கட்டி வந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அ.தி.மு.க. ஆட்சியில் சுய நிதித் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற சுமார் 2,20,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைத் தந்தார். அதேபோன்று, தற்சமயம் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் 2011 முதல் 2016 வரை விவசாயிகள் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 செலுத்தக்கூடிய கமர்ஷியல் சர்வீஸ் இணைப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 70,000 பேர் தமிழகத்திலே மின் இணைப்பு பெற்றிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தற்சமயம் 2000 ஆம் ஆண்டுக்கான பதிவு மூப்பு அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுபோன்று சுய நிதித் திட்டத்தில் ரூ.25,000/-, ரூ.50,000/- பணம் கட்டியிருக்கிறவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில்தான் இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களிடத்தில் அறிய விரும்புவது என்னவென்றால், இன்றைக்கு தமிழகம் மின் மிகை மாநிலமாகிவிட்டது. மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு நாம் விற்பனை செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனால் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், சுய நிதித் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்றிருப்பவர்களும் சரி, அதே மாதிரி கமர்ஷியல் சர்வீஸ் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்றிருக்கின்ற எல்லா விவசாயிகளுக்கும், தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்திலே 2,20,000 பேருக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. நீங்களும் இன்றைக்கு கமர்ஷியல் சர்வீஸ் இணைப்புத் திட்டத்தில் மின் இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள். இப்பொழுது 2000 ஆம் ஆண்டு பதிவு மூப்பின் அடிப்படையில் மின் இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் மின்சார இணைப்பு கேட்டாலும், உடனடியாக இலவச மின்சாரம் வழங்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரு. அர.சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தளவிலே, இன்றைக்கும் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்திலே, அண்ணன் தளபதி அவர்கள் துணை முதலமைச்சராக இருந்த சமயத்திலே, கரூர் அருகே காவேரி ஆற்றிலிருந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும், ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் தொகுதியிலே ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2011 ஆம் ஆண்டு வேடசந்தூர் அருகே ஒட்டநாகம்பட்டி வரை தண்ணீர் வந்தது. ஆனால், இதுவரை முழுமையாக எல்லா கிராமங்களுக்கும் அந்தத் தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைக்குக் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை அந்தப் பகுதியில் இருப்பதால், 1000 அடி வரை ஆழ்குழாய்க் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


பாலாறு-பொருந்தலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம், 2009ல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்திலே, துணை முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களால் அந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த சுமார் 175 கிராமங்கள் பயன்பெறக்கூடிய வகையிலே, சுமார் 19 கோடி ரூபாய் செலவிலே அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2011-ல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தையும் இன்னும் முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் மக்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இன்றைக்கு ஊராட்சி உதவி இயக்குநர் அவர்களின் நடவடிக்கையால் லாரிகள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பாலாறு-பொருந்தலாறு கூட்டுக் குடிநீர்த்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நங்காஞ்சி ஆற்றிலிருந்து ஊராட்சிகளுக்குப் பயன்படக்கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டமும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. அந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்.


நல்லதங்காள் அணை 2010ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே சுமார் 7 கோடி ரூபாய் செலவிலே தொடங்கப்பட்ட திட்டம். 2012-ல் 90 சதவிகித திட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. அங்கே சில நில உரிமையாளர்களுக்கு இன்னும் பணம் கொடுக்காத காரணத்தால், திட்டம் முழுமையடையாமல் 2012-லிருந்து இதுவரை சுமார் 10, 15 முறை நல்லதங்காள் ஆற்றிலேயிருந்து தண்ணீர் வீணாக அமராவதி ஆற்றிலே கலக்கிறது. எனவே, நல்லதங்காள் ஓடையில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றினால், அங்கேயிருக்கின்ற சுமார் 50 கிராம விவசாயிகள் பயனடைவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஏற்கெனவே, அந்தத் திட்டம் குறித்து முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களிடத்திலே சென்ற ஆண்டு கேட்ட சமயத்திலே, அந்த நில உரிமையாளர்களுக்கு உடனடியாகப் பணம் வழங்கி, மார்ச் 31 ஆம் தேதிக்குள் திட்டப் பணிகள் முடிக்கப்படும் என்று பதில் சொன்னார்கள். எனவே, நில உரிமையாளர்களுக்கு உடனடியாகப் பணத்தைக் கொடுத்து, அந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால், அந்தப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரம் செழிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்…


அடுத்து, பரப்பலாறு அணை. 1971 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே, ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு வரையான ஊராட்சி மலைப் பகுதியிலே, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அணை கட்டப்பட்டது. அந்த அணையினுடைய கொள்ளளவு 90 அடி. இப்பொழுது 40, 50 அடிக்கு வண்டல் மண் படிந்து, அந்த அணையினுடைய முழு கொள்ளளவையும் எட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. அந்த அணையைத் தூர் வாருவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, மத்திய வனத்துறையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நான் கேள்விப்படுகின்றேன். அந்த அணையைத் தூர் வாரினால், அங்கேயுள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் நிறையும். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கும் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அந்த அணையை விரைவிலே தூர் வாருவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவிருக்கின்றன. எனவே, அந்தத் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன். ஒட்டன்சத்திரம் தொகுதியிலே, நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் போடப்பட்டு 7, 8 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு அந்தச் சாலைகள் எல்லாம் மிகவும் பழுதடைந்து இருக்கின்றன. எனவே, மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள், அந்தச் சாலைகளை எல்லாம் இந்த ஆண்டு C.R.I.D.P திட்டத்திலே எடுத்து, சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.


திரு. எடப்பாடி கே. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் மிக முக்கியமான பிரச்சினையை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்…  கொத்தையம் கிராமத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் போல தங்களுக்கும் வழங்க வேண்டுமென்று போடுவார்பட்டி கிராம மக்களும் தொடர்ந்து வற்புறுத்துகின்ற காரணத்தினாலே காலதாமதம் ஏற்பட்டிருக்கின்றது… நில எடுப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடரப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்… பரப்பலாறு அணையைத் தூர் வாருவது பற்றி இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் புறவழிச் சாலை பற்றித்தான் அடிக்கடி பேசுவார். திண்டுக்கல் புறவழிச் சாலை குறித்து ஏற்கெனவே அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயிருந்து அடிக்கடி கேள்வி கேட்டு வருகின்றார். அதற்குண்டான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்பதைத் தங்கள் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. அர. சக்கரபாணி: எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், நேற்றைய முன்தினம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தொகுதியில் 1,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டிருக்கிறது; அதேபோல, தமிழகம் முழுவதும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுமா என்று வினா எழுப்பியதற்கு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவான பதிலைச் சொன்னார். நான் கேட்டுக்கொள்வது என்னவெனில், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான அனுமதி இன்னும் வரவில்லை என்று வட்டாட்சியர் அலுவலகங்களில் சொல்கிறார்கள். எனவே, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தகுதியுள்ளவர்களுக்கும், ஏற்கெனவே முதியோர் உதவித் தொகை பெற்றவர்களுக்கும், சில மாதங்களாக, சில ஆண்டுகளாக உதவித் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையும் கண்டறிந்து, அவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரு. அர.சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பால் உற்பத்தி குறித்துச் சொன்னார்கள். ஏனென்றால், நாங்களும் கிராமத்திலிருந்துதான் வருகிறோம்… எனது தொகுதியில் ஆவின் நிறுவனத்திற்குக் கொண்டு செல்கின்ற பாலை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதை ஆய்வு செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையுமே இல்லை என்று சொல்லக்கூடாது…

திண்டுக்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் அதேபோல பூசாரிகவுண்டன்வலசு, மரிச்சலம்பு ஊராட்சிக்குட்பட்ட பூலாம்பட்டி போன்ற பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில், கடந்த 2 நாட்களாக விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பாலைக் கொள்முதல் செய்யாமல் மறுக்கிறார்கள். அதற்கு காரணம் கேட்டால், தற்சமயம் பால் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. ஆகவே, கொள்முதல் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்… இந்த காரணத்தால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு பாலை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, கூட்டுறவுச் சங்கத்திற்கு விவசாயிகள் கொண்டுவரும் பாலை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி: தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் அரசு கலைக் கல்லூரி இல்லாத தொகுதிகளைக் கண்டறிந்து, எந்தெந்தத் தொகுதிகளில் கல்லூரிகள் இல்லையோ, அந்தத் தொகுதிகளில் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

 

திரு.கே.பி.அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சார்ந்திருக்கிற திண்டுக்கல் மாவட்டத்தில், ஏற்கெனவே 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 15 நிதிக் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன… மேலும், மாணவர்களுடைய எண்ணிக்கை கூடி வருகின்ற நேரத்தில், ஏற்கெனவே மாண்புமிகு உறுப்பினர் திரு.பாண்டியராஜன் அவர்களுக்கு நான் தெரிவித்தது போல, ஓர் அரசுக் கல்லூரி தொடங்கவேண்டுமென்றால், ரூ.9 கோடியே 22 இலட்சம் நிதி தேவைப்படுகின்ற சூழ்நிலையில், அரசினுடைய நிதிநிலைக்கேற்பவும், அந்தப் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்பவும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பரிசீலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தங்கள் வாயிலாகத் தெரிவித்து, அமர்கின்றேன்.

திரு. அர.சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி துவங்கும் போது அதாவது 2011-2012ல் தமிழக அரசின் கடன் சுமை 1 இலட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் என்று இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் ரூபாய் 2 இலட்சத்து 11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நிதியாண்டின் இறுதியில் 2 இலட்சத்து 52 ஆயிரம் கோடி அளவிற்குக் கடன் சுமை கூடும் என்று தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரையில், வருவாய் குறைவதற்கான முக்கிய காரணங்கள் என்று பார்த்தால், அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிக வரித்துறையில் 50 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிகிறேன். நிலுவை வரி வசூலித்தல், வரி ஏய்ப்பைத் தடுத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தவில்லை. மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் வர்த்தகம் மேம்படவில்லை. தொழில் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கவில்லை. வரி விதிப்பு நடைமுறையில் தெளிவான நிலைப்பாடு எடுக்கவில்லை. ஒற்றைச் சானா முறையில் தொழில் அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அது செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் சலுகைபோல, தமிழகத்தில் வழங்கப்படவில்லை. வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

 

வரி வசூலில் செய்துள்ள குளறுபடிகளை அரசு களைய முன்வர வேண்டும். இன்று தமிழக மக்கள் மீது கடன் சுமை ஏற இதுவே காரணமாக உள்ளது. வரி வசூல் கடுமையாக சரிவடைந்துள்ளது… தமிழக அரசுக்கு வரி வருவாய் 70 சதவிகிதம், வணிக வரியின் மூலமாகக் கிடைக்கிறது. 2015-2016 ஆம் ஆண்டில் 72 ஆயிரத்து 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி, 2016 வரை 50,100 கோடி ரூபாயே கிடைத்தது. இதனால் மார்ச் மாதத்தில் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் முன்கூட்டியே வரி கட்டும்படி வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்படிச் செய்தும், வரி வசூல் ரூ.61,709 கோடிதான் கிடைத்துள்ளது. இது இலக்கைவிட சுமார் 10 ஆயிரத்து 350 கோடி ரூபாய் குறைவு.

 

வரி வளர்ச்சி விகிதம் 11.5 சதவிகிதம் வரை உயருமென்று எதிர்பார்த்தாலும், 2.3 சதவிகிதமே இன்றைக்கு உயர்ந்துள்ளது. 2011-2012ல் 27 சதவிகிதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, படிப்படியாக சரிந்து, 2.3 சதவிகிதமாகக் குறைந்து வந்துள்ளது. முந்தைய 4 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அமைச்சர் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில், 2015-2016ல் மட்டும் வணிக வரிமூலம் வரவேண்டிய வருவாயில் 10,000 கோடி ரூபாய் மற்றும் பத்திரப்பதிவு, வாகன வரி வசூல் என்ற பிறவகைகளில் வரவேண்டிய வருவாயில் 1,900 கோடி ரூபாய் வரையிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது, 31,870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கியுள்ளது.

திரு. அர.சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு செல்கின்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு நிறைய பேர் மரணமடைத்து விடுகிறார்கள். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்களை, பிரேத அறுவை சிகிச்சை செய்கின்ற கட்டிடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தக் கட்டடத்திற்கு குளிர்சாதன வசதியோடு புதிய கட்டடம் கட்டித் தருவதற்கு முன்வருவார்களா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

திரு. அர . சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2008 ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகனப் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. அன்றைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த திரு.கே.என்.நேரு அவர்கள் டிசம்பர் மாதம் அதைத் திறந்து வைத்தார்கள். அன்று முதல் இன்று வரை வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. அமைச்சர் அவர்கள் விருப்பாட்சி அருகே 1.32 ஹெக்டேர் நிலத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கோரி, போக்குவரத்துத் துறைக்கு நிலம் மாற்றம் செய்யப்பட்டு, பணி ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே , நில மாற்றம் செய்கின்ற பணியை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டடத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை அறிவதுடன், இந்த ஆண்டே நில மாற்றம் செய்யப்பட்டு மோட்டார் ஆய்வாளர் அலுவலகத்தை உடனடியாகக் கட்டுவதற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன் வருவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்… ஒட்டன்சத்திரம் போக்குவரத்துப் பணிமனை பல  ஆண்டுக் காலமாக வாடகைக் கட்டடத்திலே இயங்கி வருகிறது. அங்கே இருக்கின்ற பேருந்துகளை இரவு நேரங்களிலே நிறுத்துகின்ற சமயத்திலே அந்தப் பணிமனையிலே இடம் போதாத காரணத்தினால் சாலை ஓரங்களில் நிறுத்துகிறார்கள். எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தப் பணி மனைக்கும் சொந்தக் கட்டடம் கட்டித் தருவதற்கு முன் வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு . அர . சக்கரபாணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவர அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தின் மையப் பகுதியில்தான் அமைத்துள்ளது. அதேபோன்று, மிகப் பெரிய தயிர், வெண்ணெய், பால் மார்க்கெட்டும் ஒட்டன்சத்திரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், ஊட்டி செல்கின்ற வாகனங்கள், ஒட்டன்சத்திரம் வழியாகத்தான் செல்கின்றன. எனவே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், திருப்பூரில் உற்பத்தி செய்கின்ற பின்னலாடைகள், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள் மூலமாக ஒட்டன்சத்திரம் நகரத்தின் வழியாகத்தான் அதிகமாகச் செல்கின்றன. மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது விவர அறிக்கையில் சுமார் ரூ.23501 கோடிக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக 22-1-2016 அன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இந்தச் சாலையானது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மதிப்பீட்டை, டெல்லி, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பியுள்ளீர்கள். தமிழ்நாடு அரசு அந்த மதிப்பீட்டை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த மதிப்பீட்டை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்புவார்களா என்பதை அறிவதுடன், சத்திரப்பட்டி புறவழிச் சாலை என்பது 2005 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இன்றைக்கு சத்திரப்பட்டியில் 2 அடுக்கு, 3 அடுக்கு என்று அடுக்குமாடி கட்டடங்கள் நிறைய இருக்கின்றன. அதிலே, யாரும் சாலையைவிட்டு ஒரு அடி கூட விலக முடியாத சூழ்நிலை இருக்கிறது. எனவே, அந்த சாலைக்கும் புறவழிச் சாலை அமைக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை 209ல் திண்டுக்கல்லிலிருந்து பெங்களூர் செல்கின்ற சாலையில் எத்தனை புறவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன? திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுவதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எப்போது திட்ட அறிக்கையை அரசுக்கு அளிக்கவிருக்கிறது? அந்தப் பணி எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : …திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு 528 கி.மீ. தூரம்; இதில் 10 கி.மீ. தூரம் வரை புறவழிச் சாலைக்கு நிலம் எடுக்கின்ற பணி முடிவு பெற்றுவிட்டது. நிலம் வகை மாற்றம் எல்லாம் செய்யப்பட்டு, மதிப்பீடு தயார் செய்யப்பட்டுவிட்டது. அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பழனியிலே அமைந்திருக்கின்ற காரணத்தினால், தைப்பூசக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூசத் திருவிழா நாட்களில் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து வருகிறார்கள். அந்த நேரத்திலே, 15 நாட்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து பழனிக்குப் பேருந்துகள் செல்ல முடிவதில்லை. மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல்லில் இருந்து தாடிக்கொம்பு, இடையக்கோட்டை, கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி வழியாகப் பேருந்துகளை இயக்குகிறார்கள். போக்குவரத்து அந்த நேரத்திலே முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

 

மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இந்தச் சாலை, திண்டுக்கல்லில் இருந்து சத்தியமங்கலம் வரை சுமார் 265.8 கி.மீ. தூரத்திற்கு, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிலம் எடுத்து பணி ஆரம்பிப்பதற்கு காலதாமதம் ஆகும். எனவே, திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை உள்ள சாலையை முன்னுரிமை கொடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பரிந்துரை செய்து, உடனடியாக 52.8 கி.மீ. சாலையை மட்டும் விரைவாக செய்வதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா? அந்த வழியாக பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். நடந்து செல்லும் பக்தர்களுக்கென்று ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள 1 மீட்டர், 1.5 மீட்டர் சாலை என்பது போதுமானதாக இல்லை. எனவே, 5 மீட்டர் அளவிற்கு, பக்தர்கள் நடப்பதற்காக தனி பாதை அமைப்பதற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்… பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு மக்கள் வருவதற்கு வசதியாக அந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகாடு ஊராட்சி என்பது மலைப் பகுதி. அங்கோ பெத்தேல்புரத்திலிருந்து, சிறுவாட்டுக்கோம்பை செல்லும் பகுதிகளில் மலை ஜாதி மக்கள் அதிகமாக, சுமார் 600, 700 பேர் வசித்து வருகிறார்கள். 2006-2011ல் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே, அந்த மலைப் பகுதிக்கு வனத்துறையின் மூலமாகத் தார்ச்சாலை அமைத்துத் தரப்பட்டது. அந்தச் சாலை இப்போது மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே, அந்த மலை ஜாதி மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணமாக சென்ற முறை கேட்டேன். இந்த முறை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் வனத்துறை மூலமாக தார்சாலையை அமைக்கும் வகையில் போதுமான நிதியை ஒதுக்கி, அதை அமைத்துத் தர முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலே மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பல இலட்சக்கணக்கான டன் அளவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு சில நேரங்களில் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்காத காரணத்தினால், காய்கறிகளை குளிர்பதனக் கிடங்கில் வைத்து பாதுகாக்க, ஏற்கனவே, 15 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை. வேளாண் விளைபொருள் விற்பனை வாரியத்திற்குச் சொந்தமான 18 ஏக்கர் இடம் அங்கு உள்ளது. எனவே, மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருவதற்கு முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

 

திரு. இரா. துரைக்கண்ணு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சிக் கொறடா அவர்கள் கூறியது போல், ஒட்டன்சத்திரத்தில்தான் தமிழ்நாட்டிலேயே அதிகளவில் காய்கறிகளும், பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டு, சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, அவருடைய கோரிக்கையை ஏற்று, தேவை இருப்பின் ஒட்டன்சத்திரத்தில் ஒரு குளிர்பதனக் கிடங்கு அமைப்பதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் நகராட்சியானது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியாக விளங்குகிறது. தென் மாவட்டங்களை இணைக்கின்ற நகரமாகவும் விளங்குகிறது. அங்கே பெரிய காய்கறி மார்க்கெட் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது. வெண்ணெய், தயிர் மார்க்கெட் வாரச் சந்தை போன்றவையும், 30 – க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அதேபோல வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. அந்த நகராட்சி 23 உட்கடை கிராமங்களையும், 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டது. அந்த நகராட்சியைப் பொறுத்த அளவிலே 5,112 குடிநீர் இணைப்புகள் தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலின் மொத்த நீளம் 65 கிலோமீட்டர். இதனால், கழிவுநீர் வெளியே செல்கின்ற சமயத்திலே, அங்கே தேங்குகின்ற நீரால் தொற்று நோய் ஏற்படுகிறது. அதேபோல, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலும் ஏற்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிதியொதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டப் பணியினை இந்த ஆண்டே தொடங்க வேண்டும். ஏனென்றால் திறந்தவெளி கழிவுநீர்க் கால்வாயினால் தேங்குகின்ற காரணத்தினால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டே பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, விரைவில் அந்தப் பணியைத் தொடங்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் நகராட்சியிலே சுமார் 27 ஏக்கர் நிலம் கொண்ட சின்னகுளம் என்ற குளம் இருக்கிறது. அந்தக் குளம் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருக்கின்றது. அது நகரின் மையப் பகுதியில் இருக்கின்றது. அந்த நகராட்சியைப் பொறுத்தளவில் சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு ஒரு பூங்கா இல்லை. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு நடைபாதை இல்லை. எனவே, அந்த குளத்தைத் தூர்வாரி, பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கேற்ற வகையில், அந்தக் குளத்தைச் சுற்றி வேலி அமைத்து, மின் விளக்குகளை அமைக்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் கூட இதுபோன்று அமைத்திருக்கிறார்கள். அதேபோன்ற வசதியை ஏற்படுத்தி, பூங்கா அமைத்துக் கொடுத்தால் சிறுவர், சிறுமியர் பயன்பெறுவார்கள். ஒரு நடைபாதை ஏற்படுத்தித் தந்தால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, அந்தக் குளத்தை தூர்வாரி, அங்கே நடைபாதை அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1987 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தப்பட்டு அதிலே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலே சுமார் 729 மாணவிகளும், அதேபோல், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 371 மாணவிகளும் என சுமார் 1100 பேர் படித்து வருகிறார்கள்; 45 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஏற்கெனவே கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டடம் பழுதடைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஓடுகள் பதிக்கப்பட்ட கட்டடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அதிலே ஏழு வகுப்பறைகள் இருக்கின்றன. ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1100 பேர் படிப்பது என்பது மிக அரிது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பள்ளி கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பாக 12 ஆம் வகுப்பில் தொடர்ந்து மாவட்ட அளவிலே முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே, அந்தப் பள்ளியில் நிறைய மாணவிகளை பெற்றோர்கள் சேர்க்கிறார்கள்.

எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த ஓட்டுக் கட்டடத்தை மாற்றுவதோடு, கூடுதல் வகுப்பறை, கீழே கலையரங்கம் போன்றும், மேலே இரண்டு மாடிக் கட்டடமும் கட்டினால் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு அது வாய்ப்பாக இருக்கும். அங்கே +1, +2ல் சுமார் 500 மாணவிகள் படிக்கிறார்கள். அந்த மாணவிகளுக்கு ஓர் ஆங்கில ஆசிரியர் மட்டும் தான் இருக்கின்றார். அதேபோல் தமிழ் ஆசிரியர்கள் இருவர் மட்டும் இருக்கிறார்கள். வணிகவியல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் தான் இருக்கிறார். எனவே, கூடுதலாக ஓர் ஆங்கில ஆசிரியரையும், வணிக ஆசிரியரையும் இந்த ஆண்டு நியமிப்பதற்கும், போதுமான கட்டடங்களைக் கட்டுவதற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட சந்தன்செட்டி வலசு, கொழுமங்கொண்டான், நரிக்கல்பட்டி, அமரப்பூண்டி போன்ற பகுதிகளிலே கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். கணக்கன்பட்டி, பூலாம்பட்டி, அமரப்பூண்டி போன்ற பகுதிகளிலே கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பழனியிலே இருக்கின்ற கூட்டுறவுச் சங்கத்திலேதான் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். எனவே, அவர்கள் கைத்தறி ஆடை நெய்வதற்கு மூலப் பொருட்களை வாங்க வேண்டும் என்று சொன்னால், சத்தியமங்கலம் மற்றும் கோயம்புத்தூருக்குச் சென்று வாங்கி வந்து, சேலை உற்பத்தி செய்து, அங்கே கொண்டுபோய் தனியாருக்கு விற்க வேண்டிய நிலைமையிருக்கிறது. தனியார் அதிலே இலாபம் சம்பாதிக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதைக் கண்டறிந்து, தனியார்கள் இலாபம் அடைவதைத் தடுக்கின்ற விதத்திலே, கணக்கன்பட்டியில் கைத்தறி நெசவாளர்களுக்கென கூட்டுறவுச் சங்கத்தை அமைத்து, எந்தெந்த நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடைந்திருக்கின்றனவோ, அவற்றுக்கெல்லாம் வேண்டிய மூலப் பொருட்களை அரசாங்கமே கொடுத்து, கூடுதலான நிதியைக் கொடுத்து, அந்த நெசவாளர்கள் பயன் பெறுகின்ற விதத்தில் வருங்காலத்தில் அதைச் செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

திரு. அர. சக்கரபாணி: பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்வண்ணம், தேர்வுகள் இல்லாமல், திறமையின் அடிப்படையில் அவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற அடிப்படையில் வேலைவாய்ப்பினை வழங்கி மத்திய அரசு பல ஆண்டு காலமாக வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறது. அதன் மூலம் பல்வேறு விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். கடந்த காலத்திலே நமது அரசு போக்குவரத்துத் துறை மூலமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாகவும் விளையாட்டு வீரர்களையெல்லாம் தேர்வு செய்தது. ஆனால், அது கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நான் மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்வது, பொதுத்துறை நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், அதிலே பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள், மாநில அளவிலே பங்குபெற்ற விளையாட்டு வீரர்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலே பங்குபெற்ற வீரர்களையெல்லாம் ஊக்குவிக்கும் வண்ணமாக இலாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களிலே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதை அறிவதோடு, பள்ளிகளிலே விளையாட்டை ஒரு கட்டாயப் பாடமாகக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், வாரத்தின் 6 நாட்களில், 2 periods- ஐ மட்டும் தான் விளையாட்டுக்கென்று ஒதுக்குகிறார்கள். அதற்கு இன்னும் கூடுதலான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் . அதேபோன்று, NIS பயிற்சி மையங்கள், இந்தியாவிலே, பாட்டியாலா, பெங்களுரு, கொல்கத்தா, காந்திநகர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் தான் உள்ளன. தமிழ்நாட்டில், அரசாங்கத்தின் சார்பில் இந்த NIS பயிற்சி மையங்கள் எங்கும் இல்லை. அதையும் தமிழ்நாட்டில் உருவாக்கித் தரவேண்டும்.

திரு. அர. சக்கரபாணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகிய இரண்டையும் பிரித்து கள்ளிமந்தையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், 35 ஊராட்சிகளைக் கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக இருக்கின்றது. ஓர் ஊராட்சி ஒன்றிய எல்லையிலிருந்து மற்றோர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குச் செல்ல வேண்டும் என்றால், சுமார் 85 கி.மீ. தொலைவிற்குச் செல்ல வேண்டும். மேலும், 2006 ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மற்றும் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவருடைய ஒப்புதலோடு கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதனை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி, கள்ளிமந்தையம் ஒன்றியத்தை புதிதாகப் பிரித்தால், மத்திய அரசின் நிதி அதிகமாக வரும். எனவே, அதனைப் பிரித்துத் தருவதற்கும், அதுபோல், உத்திரமேரூரில் 73 ஊராட்சிகள் உள்ளன. அதனையும் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் நிர்வாக நலன் கருதி, நாகர்கோவில், ஒரூர், ஆவடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிர்வாக நலன் கருதி, பொதுமக்களுடைய நலன் கருதி பெரிய ஊராட்சி ஒன்றியங்களையெல்லாம் பிரிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

Close Search Window