ஒவ்வொரு துறையிலும் தனித்துவமான முத்திரைகளைப் பதித்து பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது இந்தத் திராவிட மாடல் அரசு. அதிலொரு சில சாதனைகள் மட்டும் இங்கே… ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற அதேநாளில் ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் முக்கியமானது அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா 4000 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பும், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் உரிமையும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ நிகழ்ச்சியில் பெற்ற மனுக்களை கவனிக்க தனித் துறையும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையும் அடங்கும்.
மகளிருக்கு இலவசப் பயணம்
இதில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது திமுக அரசின் சாதனைகளில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. இந்த அறிவிப்பு, அன்றாடம் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணின் கண்களிலும் அத்தனை மலர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவிகள் தொடங்கி கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண பெண்கள் வரை அனைவரும் இந்தத் திட்டத்தைப் பாராட்டி வரவேற்றனர். இதன்மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவான ரூ.1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் நிற்காமல், மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற உத்தரவு இன்னும் பலரின் பாராட்டுகளைத் தமிழக அரசுக்குப் பெற்றுத்தந்தது.
இல்லம் தேடிக் கல்வி
கல்வியில் திமுக அரசின் மகத்தான திட்டமாகப் பார்க்கப்படுவது இல்லம் தேடிக் கல்வி திட்டம். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி முடிந்தபிறகு மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுப்பார்கள். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் இத்திட்டம் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மாணவிகளுக்கு 1000 ரூபாய்
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்பதும், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1000 ரூபாய் வழங்கும் என்பதும் எளிய பெற்றோரிடையே பெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இது திமுக அரசின் சிறந்த சாதனைகளுள் ஒன்று என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நான் முதல்வன் திட்டம்
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் முக்கிய நோக்கமே ஆண்டுக்கு பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பிலும், அறிவிலும், சிந்தனையிலும், ஆற்றலிலும், திறமையிலும் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். அதுமட்டுமல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது. அதாவது இதன்மூலம் அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என வழிகாட்டப்படும். இதனுடன் தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியும், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதுதவிர மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரிகம், மக்களோடு பழகுதல் ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரகாசமான திட்டம் என்கின்றனர் கல்வியாளர்கள்.