விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர் :
வேலுநாச்சியாருக்கும், அவருடைய படைத்தளபதிகளான மருது சகோதரர்களுக்கும் திண்டுக்கல்லில் அடைக்கலம் கொடுத்து, ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்து, தினவெடுத்த ஆங்கிலேயர்களின் உடல் கிழித்து, அந்த உதிரத்தை இந்த மண்ணுக்குக் காணிக்கையாக்கிய விருப்பாட்சியின் 19வது பாளையக்காரர், விடுதலைப்போராட்ட வீரர் கோபால் நாயக்கருக்கு ஒட்டன்சத்திரம், விருப்பாட்சியில் ரூ.69 இலட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க, 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வெள்ளையர்களைத் துரத்திய வீரம் மிக்க பாசறை விருப்பாட்சி:
25.06.1772 அன்று காளையார் கோயிலில் நடந்த கலவரத்தில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்படவே, தன் கணவரையும் நாட்டையும் இழந்தும், ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சிகர முன்னெடுப்புகளைச் செய்த பெண்ணரசி வேலு நாச்சியார். அவருக்கும், அவரின் மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, தளபதிகள் மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எட்டு ஆண்டுகள் தந்தையாக, சகோதரனாக விருப்பாச்சி மண்ணில் அடைக்கலம் தந்து, தன் அரண்மனையில் தங்கவைத்து போர்ப் பயிற்சி, சண்டைப் பயிற்சிகளை கற்றுத் தந்தவர், விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
மண்ணின் மைந்தனுக்கு மகத்தான அடையாளம் தந்த திமுக அரசு :
திப்புசுல்தான், ஹைதர் அலியின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது திண்டுக்கல். பின்னர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளால் முகலாய ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு வெள்ளையர்கள் பாளையங்களையும் மக்களையும் ஆட்சிசெய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலேயருக்கு எதிராக மலபார் கேரளா வர்மா, மருது சகோதரர்கள், மராத்திய அரசர் துண்தாஜிவாக், மாவீரன் ஹாஜிகானுடன் இணைந்து 18, 19-ம் நூற்றாண்டில் கூட்டமைப்பை ஏற்படுத்தி, பரங்கிப் படைகளைப் பதறச்செய்யும் தாக்குதலை அறிமுகப்படுத்திய மண்ணின் மைந்தர் கோபால் நாயக்கருக்க மகத்தான அங்கீகாரத்தை அளிக்கின்ற வகையிலும், வரும் இளைய தலைமுறைகளுக்கு அவரின் வீரமிக்க வரலாறை பறைசாற்றுவதற்காகவும், நினைவு மண்டபம் எழுப்ப நிதி ஒதுக்கியது, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான அன்றைய திமுக அரசு.
வீரம் செறிந்த வரலாறு :
கி.பி.1799, மார்ச் மாதம் கோபால் நாயக்கர் ஆலோசனைப்படி மணப்பாறை லட்சுமி நாயக்கர், கோபால் நாயக்கர் தந்த படைகளோடு ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர், மணப்பாறை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார்.
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது! நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை, போராளிகளைக் கண்டிருக்கிறது. அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது.
மாவீரர்களின் வரலாற்று அடையாளத்தில் திமுக-வின் பங்கு :
அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண், நம்முடைய தமிழ் மண்!இருநூறு ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல் என்று சொன்ன கோபால் நாயக்கரின் தீரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டிருந்த மண் இந்த விருப்பாட்சி மண்.
எனவே தான் ஆகச்சிறந்த படைகளை உருவாக்கி, வெள்ளையருக்கு எதிராகப் பல தாக்குதல்கள் நடத்தி, வெள்ளையரை ஓடவிட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வாழ்வு நாம் தெரிந்துகொள்ளவேண்டிய வகையில், கோபால் நாயக்கரின் பெருமையை ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி மண்ணிலே வரலாற்று அடையாளமாக சரித்திரப் பொன்னேடுகளில் அடையாளப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.