Uncategorized|

மும்பையில் இந்திய ஒற்றுமை பயணமும் – I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டமும் :

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான திரு.ராகுல்காந்தி அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் ராகுல்காந்தி நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.

மணிப்பூர் முதல் மும்பை வரை நியாய யாத்திரை :

இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து ராகுல்காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் 2ம் கட்டமாக கடந்த ஜனவரி 14ம் தேதி யாத்திரை தொடங்கினார். மணிப்பூரில் இருந்து மராட்டிய தலைநகர் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையில் அவர் பெரும்பாலும் திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி சென்று மக்களை சந்தித்தார். யாத்திரையின் இறுதியாக ராகுல்காந்தி நேற்று மராட்டிய மாநிலம் மும்பை வந்தார். தானே வழியாக மும்பை வந்த ராகுல்காந்தி தனது யாத்திரையை நிறைவு செய்தார்.

தேசிய தலைவர்கள் பங்கேற்பு:

இந்நிலையில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜிபார்க்கில் 18-03-2024 நேற்று நடைபெற்றது. இதில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் குறிப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

பா.ஜ.க.வை அகற்றுவதே INDIA கூட்டணியின் இலக்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின் முழக்கம் :

மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் இதயத்தை புரிந்து கொள்ளவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பா.ஜ.க.வின் தூக்கம் கலைந்துள்ளது.இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்காகவோ இல்லை; அது இந்தியாவிற்கானது என்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது என்றும் பேசினார்.

கூட்டாட்சி தத்துவத்தை காக்கும் நடைபயணம் :

பா.ஜ.க.வால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். குமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கிற, அனைத்து தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற அரசை கட்டமைப்பதில் நிறைவடைய வேண்டும்.

தேர்தல் பத்திர ஊழல் :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான்; ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது. இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால் யார் அதை செய்கிறார்கள் என்பது தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாக தெரிகிறது. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரத்தை இந்தியா கூட்டணி முறியடிக்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

Comments are closed.

Close Search Window