ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள 73 ஊராட்சிகளில் 25 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்து, தற்போது வரை 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பசுமை ஒட்டன்சத்திரம் தொகுதியாக மாற்ற தீவிர முயற்சி எடுத்து வரும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு 1,30,060 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31,194 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே பசுமை பரப்பாக உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய வனக்கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம் அதாவது தமிழகத்தில் 42,919 சதுர கிலோமீட்டர் பசுமை வனமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கை எட்ட தமிழகம் 13,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பசுமையை உருவாக்க வேண்டியுள்ளது. ஒட்டன்சத்திரத்திற்கு பசுமை தானம் தரும் மரங்களின் மகனாக அர.சக்கரபாணி இருக்கிறார்.
மரங்கள் காற்றுமண்டலத்தை அடித்து துவைக்கும் சுகாதார காப்பான்கள்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பினை அடுத்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் தீவிர முயற்சியால், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளிலும் சுமார் 25 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களது ஊராட்சி பகுதிகளுக்கான தேவையான மரக்கன்றுகளை பெற்று ஒட்டன்சத்திரம் தொகுதியை பசுமை ஒட்டன்சத்திரமாக முன்னெடுத்து வருவதில் மிகுந்த ஆர்வத்துடன் இப்பணியை செய்து வருகின்றனர்.
அமைச்சரின் கனவு திட்டம்:
அமைச்சர் அர.சக்கரபாணி பசுமை ஒட்டன்சத்திரம் திட்டத்தை தனது கனவு திட்டமாக எண்ணி கள்ளிமந்தயம் பகுதியில் புதிய நர்சரி பண்ணை வைத்து அதில் மலைவேம்பு, கொய்யா, நெல்லி, முருங்கை, நாவல், மருது, புளி, வேம்பு, புங்கன், மந்தாரை, வாகை, இலுப்பை, ஆயமரம், பூவரசு, சீத்தா, சொர்க்கமரம், தான்ரிகா, மகாகனி, சிசு, பாதானி உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். இங்கிருந்து ஒவ்வொரு ஊராட்சி பகுதிக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை கொடுப்பதுடன், அதனை நடவு செய்வது, டிராக்டர்களை அனுப்பி தண்ணீர் பாய்ச்சுவது என அனைத்து வசதிகளையும் அமைச்சர் செய்து வருகிறார். இதேபோல் தொகுதி முழுவதும் 10 லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான மரக்கன்றுகள், பனை விதைகள் சேலம், மேச்சேரி, வாடிப்பட்டி, அருப்புக்கோட்டை, ஆந்திரா, ராஜமந்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மியாவாக்கி முறையில் அடர்வனம் காடுகளை அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விரைவில் ஒட்டன்சத்திரம் தொகுதி ‘பசுமை ஒட்டன்சத்திரம்’ தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை அமைச்சர் எடுத்து வருகிறார்.
நடவு டூ பராமரிப்பு வரை உதவி:
தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் திட்டத்தை முன்னெடுத்து சென்று ஒட்டன்சத்திரம் தொகுதியை பசுமை ஒட்டன்சத்திரமாக மாற்றுவதற்கு அமைச்சர் அர.சக்கரபாணி சீரிய முறையில் பணியாற்றி வருகிறார். ஊராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மரத்திற்கும் பசுமைவேலி அமைத்து எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்று தினமும் ஒவ்வொரு உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டு, தேவையான உதவிகளை செய்து வருகிறார். விரைவில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உலக சாதனை முயற்சியாக 6 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணிகளையும் முன்னெடுத்து செய்து வருகிறார். ஒட்டன்சத்திரம் பகுதியை பசுமையாக மாற்ற தீவிர முயற்சி எடுத்து வரும் அமைச்சர் அர.சக்கரபாணிக்கு இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.