Uncategorized|

சிலையாய் நின்று நம்மையெல்லாம் நிலையாய் இயக்குபவர் கலைஞர் :

நம் இதயத் துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞர் போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது.

இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

நின்ற தேர்தலிலெல்லாம் வென்ற தலைவர் :

முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

கலைஞர் ஓர் வரலாற்று ஆவணம் :

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நிரந்தர ஓய்வுகொள்ளும் சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஆண்டுகளில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

ஒவ்வொரு நாளும் கலைஞர் பிறந்தநாள் :

ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களிள் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற ‘திராவிடல் மாடல்’ அரசின் கடந்த மூன்றாண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும்.

தி.மு.க-வின் தோழமையில் புதிய இந்தியா :

திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது. ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.

Comments are closed.

Close Search Window