General|

தமிழ்நாடு ஒரு பெரிய போராட்டத்தினை மீண்டும் சந்திக்கப் போகிறது, கடந்த நவம்பர் நான்காம் தேதியன்று, திமுக ஒன்றிய அரசின் தொடர் இந்தி திணிப்பை கண்டித்து பொதுக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்தது.

இனி வருங்காலங்களில் உயர்கல்வியில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இந்திய அலுவல் மொழி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை எதிர்த்து, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதை கண்டித்து கடந்த 18ஆம் தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இந்தியாதிக்கம் மீண்டும் பல மாநிலங்களின் உரிமையை மறைமுகமாக பறிக்கப் பார்க்கிறது”

கட்சி சார்பற்று பல மாநில மக்கள் இந்தியை எதிர்க்க முன்வந்துள்ளனர்!

1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தன.

சில நாட்களுக்கு முன்னால் வங்காளத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரின் படத்தை கையில் ஏந்தி, அம்மாநில மக்கள் ஊர்வலம் சென்றார்கள்.

“இந்தி எதிர்ப்பில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது”

என்பதற்கு இந்த ஒற்றைக் காட்சியே சரியான சான்றாகும்!

அன்று நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியை திணிக்க முயன்றபோது, அதை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்த்தது. தமிழ்நாட்டில் காமராஜர் கூட  இந்தியை ஆதரித்தார், காரணம் தேசிய நீரோட்டத்தில் கரைந்திருந்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தி என்பது இந்தியாவின் முகமாக தெரிந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை, இந்தி எதிர்ப்புக்கு எதிரான மனநிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களே வெளிப்படுத்துகிறார்.

இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன;

அரசியல் சாசனத்தில் “18 மொழிகளுக்கு” இடம் தந்திருக்கிறார்கள்;

அதில் ஆங்கிலம் இருக்கிறது, தமிழும் இருக்கிறது, இந்தியையும் சேர்த்து பலமொழிகள் இருக்கிறது எனவே அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பல நாடுகளில் நான்கு மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கின்றன,

பெல்ஜியத்தில் இரண்டு ஆட்சி மொழிகள், இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகள், சிங்கப்பூரில் நான்கு ஆட்சி மொழிகள், கனடாவில் இரண்டு ஆட்சி மொழிகள் இருக்கின்றன.

ஆக இந்தியாவில் ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை உணர்ந்துதான் ஜவஹர்லால் நேரு அவர்கள் அப்போதே உறுதிமொழி தந்தார்கள்

“இந்தியாவில் இந்தி பேசாத மக்கள் ஏற்கும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்று”

இந்தி திணிப்பை திமுக எதிர்த்தது போல் இதற்கு முன்னும் பின்னும் யாரும் எதிர்த்ததில்லை

திமுக தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல் அதற்கு முன்னும் பின்னும் இதுவரை தமிழ்நாட்டில் எந்த போராட்டமும் நடந்தது இல்லை என்று அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கு உட்பட்டு மொழிநிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாம்?? என்ன பரிந்துரை??

நாட்டிலுள்ள அனைத்து ஐஐடி,ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திதான் பயிற்சி மையமாக இருக்க வேண்டும் என்று?

உடனே கேள்வி எழுகிறது? மும்பை கான்பூரில் டெல்லி பல்கலைக்கழகத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மற்ற மத்திய பல்கலைக்கழகத்தில் ஹிந்திதான் இனி பயிற்சிமொழி என்றால், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள்  அந்தப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் சேர முடியாதா? என்று நான் அதைக் கேட்டேன். ஆனால் இன்று வரை அதற்கு பதில் கிடையாது என்கின்றார் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்.

” இந்தி திணிப்பை உடனடியாக எதிர்த்த முதல் முதலமைச்சர் தளபதி மு.க ‘ஸ்டாலின்’ தான் என்கிறார் ஆ ராசா.

இந்தி திணிப்புக்காக தேசிய அளவில் திமுக முன்னெடுத்த பல்வேறு தருணங்கள் என்ன?

அதன் மூலம் நாடு எவ்வாறு காப்பாற்றப்பட்டது? என்ற ஒரு சில மேற்கோள்களை சுட்டிக்காட்டுகிறேன்.

திமுக தேசிய கட்சி அல்ல! அது மாநிலக் கட்சி!

திமுக தொடங்கிய நாள்தொட்டு அது தன்னை தேசிய கட்சி என்று அறிவிக்காவிட்டாலும்  கூட , ஒரு மாநில கட்சி என்று சுருங்கி கொள்ளாமல் இந்தியாவின் பலதரப்பட்ட பிரச்சனைகளின் முதல் குரலாக ஒலித்து வந்திருக்கிறது.

திமுக ஒரு காலத்தில் தனிநாடு கேட்ட இயக்கம்’

திராவிட நாடு கேட்ட இயக்கம், எனக்கு நாட்டுப்பற்று கிடையாது, மதப்பற்று கிடையாது, சாதிப்பற்று கிடையாது என்று தந்தை பெரியார் சொன்னார். 1962 ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்து வந்தபோது இங்குள்ள சூத்திரர்கள் கோவிலுக்கு உள்ளே போக முடியவில்லை, ஆக அவர்களுக்காக கோவில் நுழைவுப் போராட்டத்தை அறிவிக்க போகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் சீனா படையெடுத்து வருகிறது நாடு என்னவாகுமோ தெரியவில்லை, என கேட்டார்கள். நீங்கள் கர்ப்ப கிரகத்திற்குள் செல்வதற்கு போராட்டம் நடத்த போகிறேன் என்கிறீர்களே

இது நியாயம் தானா? என்றனர்.

அப்போது பெரியார் ஒருவேளை சீனாக்காரன் படையெடுத்து வருவதன்மூலம் என் சூத்திர பட்டம், பஞ்ச பட்டம் போகுமானால் சீனர்களை நான் வரவேற்பேன் என்றார் ஆனால் அதை அண்ணா ஏற்றுக் கொள்ளவில்லை.

வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் திராவிட நாடு கோரிக்கையை நான் கை விடுகிறேன் இந்திய தேசியத்தை நான் ஆதரிக்கிறேன்

இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து வந்தால் அதை திமுக ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது என்று முழங்கினார் அண்ணா.

இந்திய அரசியல் சாசனத்தை திறந்தால் முதல்வரி என்ன இருக்கிறது என்று தெரியுமா??

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இறையாண்மை உள்ள நாடு, மதச்சார்பற்ற நாடு, ஒரு சமதர்ம நாடு என்றுதான் இருக்கிறது. இந்த அடிப்படை பண்புகளுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்ததோ அப்போதெல்லாம் முதல் ஆளாக குரல் கொடுத்து இந்திய தேசத்தை காப்பாற்றிய இயக்கம் திமுக.

1962 ஆம் ஆண்டு சீனா மூலம் இந்தியாவுக்கு ஆபத்து வந்தபோது அண்ணா சொன்னார் நாங்கள் இந்தியா பக்கம் இருக்கிறோம் என்று.

அதேபோல் 1971 ஆம் ஆண்டு இந்தியா மீது பாகிஸ்தான் படை எடுத்து வந்தது அன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்து ஐந்து கோடி ரூபாயை வசூலித்துக்கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றுவோம் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். எனவே இந்தியாவின் இறையாண்மையை திமுக தொடர்ந்து இன்றுவரை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி காப்பாற்றி வருகிறது என்பதே சேதாரமில்லாத உண்மை.

Comments are closed.

Close Search Window