இன்னார்தான் படிக்கலாம், இன்னார் படிக்கத் தேவையில்லை உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே பார்க்கலாம் என்ற நிலைமை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பெண்களின் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. நீதிக்கட்சி ஆட்சி வந்து இந்த நிலை மாறத் தொடங்கியது. ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்று கேட்ட காலத்தில், சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று சொன்னவர் பெரியார். அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளால்தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழத் தொடங்கியது.
குழந்தை திருமணங்கள்
அந்தக் காலத்தில் எட்டு வயது – பத்து வயது பெண் குழந்தைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணங்களை குற்றச் செயல்கள் என்று சட்டம் போட்டிருக்கிறோம். இந்த நிலையை நாம் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. எத்தனையோ பேர் மதம், கலாச்சாரம் என்ற பெயரில் போட்ட முட்டுக்கட்டைகளைக் கடந்துதான் இதை அடைந்திருக்கிறோம்.
முதல் தலைமுறை பட்டதாரி
உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல – அது உங்கள் அடிப்படை உரிமை. கழக ஆட்சி அமைந்த காலத்தில் எல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இப்போது தீட்டியும் வருகிறது. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தலைவர் கலைஞருடைய அரசு.
அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு. அதை உருவாக்கித் தந்தவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆகவும் உயர்த்தியிருக்கிறார்கள்,போறப்போக்கில், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டிலிருந்து தற்போது 50 சதவீதம் இடஒதுக்கீடாக உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்
மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது கழக அரசு தான். மகளிர் தொழில் முனைவோர் உதவித்திட்டம் கொண்டு வந்தது என ஒரு பெரிய பட்டியலை அடுக்கிக் கொண்டிருக்க முடியும். அந்த வரிசையில்தான் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. இது ஏதோ வெறும் கட்டணச் சலுகை என்று மக்கள் நினைத்திட வேண்டாம். பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய திட்டம் தான் இந்தத் திட்டம்.
புதுமைப் பெண்
இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் – உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்காக மட்டும் கழக அரசு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.