General|

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திமுக தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்தது. அப்போது கொரோனா இரண்டாம் அலை எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். அந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கைகளிலிருந்து தொடங்குகிறது திமுக அரசின் சாதனைப் பட்டியல்.

முதலீட்டில் முதலிடம்

கடந்த ஓராண்டில் இந்தியாவில் தொழில் முதலீடுகளுக்கு சிறந்த மாநிலம் என பெயரெடுத்துள்ளது தமிழ்நாடு. இதை ‘பிராஜெக்ட்ஸ் டுடே’ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாக, தமிழகத்தில் மட்டும் 304 திட்டங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு முதலீடு என்பதுதான் தொழிற்துறையில் திமுக அரசின் மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. இதற்குக் காரணம் சிறப்பான கொள்கைகளும், பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கும் அணுகுமுறைகளும், முடிவுகளை விரைவாக எடுப்பதுமே ஆகும் என நிறுவனங்கள் கூறியிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் சட்டசபையில் நடந்த தொழிற்துறை மானியக் கோரிக்கையின்போதுகூட தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 25 முக்கிய அறிவிப்பு களை வெளியிட்டார்.

அதில் 1800 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைத்தல், தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இதனால் வருங்காலங்களில் இன்னும் பல்வேறு உயரங்களைத் தொழிற்துறை எட்டும் என கணிக்கின்றனர் நிபுணர்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

இந்து சமய அறநிலையத்துறை, முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பிலும் உத்தரவின்படியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றியது முக்கியமான ஒன்று. தவிர, 1689 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமித்தது, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது என இந்தத் துறையில் பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. குறிப்பாக, துறை சார்ந்த செயல்பாடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும் உத்தரவால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

வேலை வாய்ப்பு

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதே அரசின் இலக்கு என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், 513 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக திமுக அரசு சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து வருகிறது.

Comments are closed.

Close Search Window