General|

உடல் குறைபாட்டுடன் அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்துவதே அல்லல் நிறைந்த பெரும் சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை ஊனமுற்றோர் என அழைத்துவந்த காலத்தில் அவர்களின் குறை என்றைக்கும் திறன்களில் இல்லை என்றும், இனி இந்த உடன்பிறப்புகளுக்கு ‘மாற்றுத் திறனாளிகள்’ என கண்ணியமான பெயர் வைத்து, அவர்களின் நலனுக்கென தனித்துறையை உருவாக்கி, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து அக்கறையுடன் கவனித்தவர் தமிழினத் தலைவர் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கண்ணொளித் திட்டம் முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் வரை, ஒவ்வொன்றையும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தி இதய நிறைவு கொண்டவர் தலைவர் கலைஞர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, அவர்களுக்குத் துணையாகப் பேருந்தில் பயணிப்போருக்கும் கட்டணச் சலுகை, மேற்படிப்பு பயில்வோருக்கு முழுக் கட்டணச் சலுகை எனத் தலைவர் கலைஞரின் ஆட்சி காலத்தில் உரிமைகள் – சலுகைகள் பலவும் தொடர்ந்து வழங்கப்பட்டன. டிசம்பர் 3ஆம் நாளினை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ள நிலையில், அந்த நாளில் நடைபெறும் தங்களுக்கான உரிமை போற்றும் நிகழ்வுகளில், தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விருப்ப விடுப்பு எடுக்கும் நல்வாய்ப்பையும் வழங்கியது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் இத்தகைய வாய்ப்பை எண்ணிப் பார்க்காத நிலையில், தலைவர் கலைஞர் இதனை வழங்கினார். அடுக்கடுக்கான பல திட்டங்களையும் வகுத்தளித்தார். அந்த நன்றிப் பெருக்குடன், அவரின் ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வணக்கத்தைச் செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு, ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

திமுக என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மதித்து, தேவைகளை நிறைவேற்றி, நலன் பேணும் அற இயக்கம்.  அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேற்றி வருகிறார்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மாநில வாரியம், தொழுநோய் இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கும் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம், மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கல்வி உதவித் தொகை, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ரத்து என திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும்.

மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய்பேச முடியாதவர்களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனைவரையுமே “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கின்ற முறை குறித்து 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நமது இந்திய நாடு ஏழாவது நாடாகக் கையொப்பம் இட்டுள்ளது.

அந்த இணக்க ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் முதல், “சர்வதேச மனித உரிமைச் சட்டம்” ஆக அமைந்தது.

அதன்படி, தமிழகத்தில் அப்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு இனி “ஊனமுற்றோர்” என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், “மாற்றுத் திறனாளிகள்” என அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

சென்னை மெரினா கடற்கரையில் தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலையை ரசிக்க ஓடோடி வருகின்றனர், மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க முடியவில்லை என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடற்கரை மணலில் சக்கர நாற்காலியை இயக்க முடியாததால் அவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்தது. எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் அவர்களுக்கு நிரந்தர பாதையை அமைத்துக்கொடுத்து அவர்களின் கனவை நிறைவேற்றிக்காட்டியவர் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள். ஆக அன்று முதல் இன்றுவரை என்றைக்கும் மாற்றுத்திறனாளிகளின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் அரசாக கழக அரசு இருந்துவருகிறது என்பதில்  எள்முனையளவும் சந்தேகமில்லை.

Comments are closed.

Close Search Window