10 ஆண்டுகளுக்கு மேலாக வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு :
மக்கள் தொகையை குறைத்ததற்காக தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிப்பது மிகப் பெரிய அநீதியாகும்! ஒன்றிய பா.ஜ.க அரசு மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை எந்தெந்த வகையில் வஞ்சிக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
40 கட்சிகள் அடங்கிய அனைத்துக்கட்சி கூட்டம் :
2026-ம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் கடுமையாக பாதிக்கப்பட போகும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்த அச்சத்தை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5-ம் தேதி 40 கட்சிகள் அடங்கிய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் தொகை 3 மடங்காக உயர்வு :
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1951-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6.02 கோடியிலிருந்து 2011-ல் 19.98 கோடியாகவும், மகாராஷ்டிரா 5.04 கோடியிலிருந்து 11.23 கோடியும், பிஹார் 4.21 கோடியிலிருந்து 10.38 கோடியும், மத்தியப் பிரதேசம் 3 கோடியிலிருந்து 7.25 கோடியும், தமிழகம் 4.11 கோடியிலிருந்து 7.21 கோடியாக உயர்ந்திருக்கிறது. குடும்ப கட்டுப்பாட்டை நிறைவேற்றாத உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்கள் தொகை 1951-ல் இருந்து 3 மடங்காக உயர்ந்திருக்கிறது.
அதனால், அதனுடைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய மறுசீரமைப்பின்படி 80-ல் இருந்து 143-ஆகவும், பிஹார் 40-ல் இருந்து 79 -ஆகவும், ராஜஸ்தான் 25-ல் இருந்து 50- ஆகவும், மத்தியப்பிரதேசம் 29-ல் இருந்து 52-ஆகவும், மகாராஷ்டிரா 48-ல் இருந்து 76-ஆகவும், குஜராத் 26-ல் இருந்து 43-ஆகவும் உயருகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் எண்ணிக்கை 39-ல் இருந்து 49-ஆக உயருகிற வாய்ப்புதான் இருக்கிறது.
மக்களவையின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசு முயற்சி :
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 63 தொகுதிகள் கூடுதலாகவும், தமிழகத்துக்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 848-ஆக உயர்த்துவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. அதற்காகதான் மக்களவையில் 888 பேர் அமரக்கூடிய வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திட்டமிட்டு கட்டியிருக்கிறார்.
கடந்த காலங்களில் பிரதமர்களின் நடவடிக்கை :
கடந்த காலங்களில் பிரதமர் இந்திரா காந்தி, பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்புக்கு கால நீட்டிப்பு வழங்கி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்ததைப் போல, தற்போதைய மோடி அரசும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்பதன் மூலமே தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.
அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொள்வார் :
வருகிற 5-ம் தேதி தமிழக முதல்வர் கூட்டியிருக்கிற அனைத்து கட்சி கூட்டத்தின் மூலமாக தமிழகத்துக்கு மக்களவையில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நம்பப்படுகிறது.