மகளிர் விடுதலைக்காக போராடுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் திமுக முன்னணியில் இருந்துவருகிறது. திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நினைவுகூரலாம் குறிப்பாக மகளிர் பாதுகாப்புக்காக ஈவ்டீசீங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டுகளையும் அவற்றுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றியில் என்றைக்கும் துணைநின்று வரும் இயக்கம் திமுக.
பெண்களின் ஆற்றல் முன் எப்போதையும் விட பெருகி வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அரணாக இருந்துவருகிறார்.
பெண் விடுதலைக்கு இந்திய அளவில் தமிழ்நாடு முன்மாதிரி
பெண்களின் முன்னேற்றத்துக்காக இந்தியா விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், பெண் உரிமையை முதன்முதலாக முன்மொழிந்த மாநிலம் தமிழ்நாடு. பெரியாருக்கு முன்பே ‘ஆணுக்கு பெண்ணிங்கே சரிநிகர் சமானம்’ எனப் பாரதி பாடிய காலத்தில், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. ‘மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?’ எனப் பாரதிதாசன் பாடிய போதும்கூட, இந்திய அளவில் பெண் உரிமை குறித்து அமைதியே நிலவியது. இன்றைக்கும்கூட வலதுசாரி கருத்தினை முன்வைப்பவர்கள் ‘பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது’ என்றே பேசுகின்றனர் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்குப் பெண் உரிமை சரியாகப் போய்ச் சேரவில்லை. ஆனால், ‘பெண்கள் முன்னேற்றமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்’ என்ற உயரிய நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேருந்தில் மகளிருக்கு விலையில்லா பயணத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றவுடன் ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது, ‘சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்’ என்ற திட்டம். இது இன்று பலதரப்பட்ட பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, புத்தாண்டுக்கு முன்பாக ‘181’ மகளிர் உதவி மையத்தைத் தொடங்கி வைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழியேற்றார்.
பெரியார் போட்டுத்தந்த பாதையில் அண்ணா காட்டிய வழியில் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் 1988 முதல் 91 வரை முதலமைச்சராக இருந்தபோதுதான் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டது. இதற்கான சட்டமும் 1990 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே முதன்முதலாக வழங்கப்பட்டு, அதன்பயனாக 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளில் வந்து அமர்ந்தனர் என்பது மிக முக்கியமான தகவல். திமுக ஆட்சி என்ன செய்துவிட்டது?’ என இன்றைக்கும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.
உள்ளாட்சியில் திமுக கொடுத்த 50%இட ஒதுக்கீடு
தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது பெண்களின் மேம்பாட்டுக்காக 1989 ஆம் ஆண்டில் தருமபுரியில் மகளிர் சுய உதவிக் குழு முதன்முதலாக தொடங்கப்பட்டது. 1989 தொடங்கி 1991 வரையான காலகட்டப் பகுதியில் காதி மற்றும் கதர் துறையில் மட்டும் 3,31,000 பெண்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 1,25,000 பெண்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வியப்பளிக்கும் புள்ளிவிவரம்.
பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது மட்டுமே சமூக மேம்பாட்டை உருவாக்காது என்பதால், சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு தினசரி கடன் தொகையாக ரூ 500 முதல் 5,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. இதனால் படித்து வேலைக்குச் செல்லும் பெண்களைத் தாண்டி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 1,44,913 பேர் பயன்பெற்றனர். இதற்காக 18 கோடி ரூபாய் நிதி சிறு வணிகக் கடனாக வழங்கப்பட்ட்டுள்ளது.
திராவிட இயக்கங்களின் ஆட்சியில்தான் பெண் விடுதலை என்பது வெறும் விவாதப் பொருளாக இல்லாமல், அதற்கு சட்டரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை இன்றைய இளம் தலைமுறை உணர வேண்டிய செய்தியாகும்.