Uncategorized|

உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் வகையிலும், தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம் ஆன்மீக ஸ்தலமான பழனியில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து முருக பக்தர்கள் இலட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம் :

  • முருக வழிபாட்டின் உள்ளார்ந்த நெறிமுறைகளை உலகெங்கிலும் பரப்புதல்.
  • முருகப் பெருமானை அடையும் தத்துவ கோட்பாடுகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுத்துரைத்தல்.
  • முருகனின் பெருமைகளை பரப்பும் உலகம் முழுவதிலும் உள்ள முருக அடியார்களை ஒருங்கிணைப்பது.
  • முருகனை அடையும் வழிகளையும், முருகனின் மகிமைகளையும் சொல்லும் புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களை உலகம் அறிய செய்தல்.
  • முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து, அதன் மூலமாக உலகை உயர்த்த வழி வகுத்தல்.

முருகன் மாநாட்டின் நிகழ்வுகள் :

முதல் முறையாக பழநியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கட்டுரை ஆய்வரங்கம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகளை சொல்லும் கண்காட்சிகள், புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சிகள், பக்தர்கள் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம், 3டி தொழில்நுட்பத்துடனான முருகன் பக்தி பாடல்கள் காட்சி அரங்கம், முருகன் அடியாளர்களின் பெயர்களில் விருது வழங்கும் விழா, ஆன்மிக சொற்பொழிவுகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளன.

முருகன் மாநாட்டு பேச்சாளர்கள் :

1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவண்ணாமலை ஆதீனம்.

2. திருக்கயிலாய பரம்பரை திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேரூர் ஆதீனம்.

3. தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம்.

4. தவத்திரு ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம்.

5. முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

6. ஆறு.திருமுருகன், இலங்கை, ஆன்மீகப் பேச்சாளர்

7. சுகி சிவம், ஆன்மீகப் பேச்சாளர்

8. தேச மங்கையர்க்கரசி, ஆன்மீகப் பேச்சாளர்

9. முனைவர் அ.சிவபெருமான், மேனாள் பேரசிரியர் தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

10. முனைவர் போ.சத்தியமூர்த்தி, தலைவர் தமிழித்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

மாநாடு நடைபெறும் இடம் :

முருகன் மாநாட்டில் பெருந்திரளான முருக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பழனி- திண்டுக்கல் சாலையில் சிவகிரிப்பட்டியில் அமைந்து உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த முழு விபரங்களையும் உலகம் முழுடதிலும் உள்ள முருக பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற பிரத்யேக இணையதளம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள், முருக பக்தர்கள் அனைவரையும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

Comments are closed.

Close Search Window