General|

இந்தியச் சமூகம் சாதியக் கட்டமைப்புகளால் ஆனது. சாதியக்கூறுகள் இல்லாமல் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இங்கே நகர்வதில்லை. இது ஆயிரக்கணக்கான தலை முறைகளாக நிலவுகிறது. சாதிக்கு எதிராக,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் பாடிய காலத்தில் இருந்து,

‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து எதிர்க் குரல்களும் ஒலிக்கின்றன. சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் சாதியை ஒழிக்கவில்லை காரணம் முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தாக்கத்தையும் விளைவையும் உருவாக்கியிருக்கிறது. திராவிடர் இயக்கத்தையும் இதன் நீட்சியாகவே நாம் பார்க்கிறோம்.

தலைவர் கலைஞரின் சமத்துவ செயல்பாடுகள்

சாதி ஒழிப்பில் அவர் காட்டிய அக்கறைக்கு, பெரியார் நினைவுச் சமத்துவபுரம் திட்டம் ஒரு சான்று போதும் என்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் இந்த நாடு இரட்டை இந்தியாவாகத்தான் இருக்கிறது. ஒன்று, ஊர்த்தெரு இந்தியா; இன்னொன்று சேரி இந்தியா. ஒரே ஊராக எந்தக் கிராமமும் இல்லை. சுடுகாடுகள்கூட இங்கு இரண்டுதான். எல்லாச் சாதி மக்களையும் ஒரே இடத்தில் வாழ வைக்க முடியாதா என்று யாரும் கவலைப்படாதபோது, பெரியார், அம்பேத்கர் வழியில் தலைவர் கலைஞர் அப்படி யோசித்தார். எல்லாச் சாதியினரும் ஓரிடத்தில் வாழ ஒரு நகரமைப்பை உருவாக்கினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் தொடங்கிய சமத்துவபுரங்கள் எவ்வளவு பெரிய கனவு! சாதி ஒழிப்பில் அவர் காட்டிய அக்கறை, அடையாள அரசியலுக்கானது அல்ல. அம்பேத்கர் சிலையைப் பார்த்தாலே சாணியெடுத்து வீசும் வெறுப்பு நெருப்பாய்த் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், அம்பேத்கரின் பெயரில் சட்டக் கல்லூரி அமைத்தார். அதுவும் எப்போது? மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்று சிவசேனையினர் போராடியதோடு மட்டுமில்லாமல், அம்பேத்கரின் பெயரில் அமைந்த நூலகத்தை எரித்தும் சாம்பலாக்கினார்கள்.

வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினார்கள். தலித் மாணவர்கள் வீதியிலே உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அப்போது அதைக் கண்டித்த தலைவர் கலைஞர், அந்தக் கண்டனம் பெயரளவிலானது அல்ல என்று உணர்த்தும் வகையிலேதான் தமிழகத்தில் உருவான சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டினார். எவ்வளவோ விடயங்களை இப்படிப் பட்டியலிடலாம்.

ஒன்றின்கீழ் மற்றொன்று எனும் அடிப்படையில் இறுக்கமான அடுக்குகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற இந்திய சாதீய அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் சேரிகளில் ஒடுக்கப்பட்டுமல்ல, ஒதுக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்று உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் தந்தை பெரியார் பெயரில் 100 சமத்துவபுரங்களை அமைத்தவர் என்பதை சரித்திரத்திலிருந்து எவரும் பிரித்திட முடியாது.

கலைஞர் ஆட்சியில் தமிழகம் கண்ட சமத்துவபுரத்தை வேறு எந்த மாநிலமும் கண்டிட இதுவரை மனவலிமை பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே சாதி படிநிலை உண்டு என்பதை எவரும் அறிவர். அதிலே கடைசி படிநிலையில் அருந்ததியர் வைக்கப்பட்டு துப்புரவு தொழிலாளர்களாகவும், கூலிகளாகவும் அவர்கள் நசுக்கப்பட்டு அரசு தரும் இடஒதுக்கீட்டை கூட எட்டி தொடமுடியாத தூரத்தில் சமூக நீதிக்கு வெளியே அல்லலுறுவதை கண்ட திமுகவின் தலைவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்தான் பல எதிர்ப்புகளை புறந்தள்ளி மூன்று சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, ஆயிரக்கணக்கான அருந்ததிய இளைஞர்களை மருத்துவர்களாகவும், அரசு பணியாளர்களாகவும் அமர்த்திட வழிவகை செய்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு உறுதியான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 20 ஊராட்சிகளில் மட்டுமல்ல அனைத்து தனி ஊராட்சிகளிலும் தலித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்வதற்காக  சிறப்பு ஆணையை வெளியிட்டது. அனைத்து தனி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த குறுஞ்செய்தியும் அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலையிட்டு உறுதி செய்திருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகளினால் தமிழ்நாடு முழுவதும் தனி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்திருக்கிறார்கள். சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளில் ஒன்றான நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியின தகுதி மட்டுமின்றி – திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களின் வாழ்விடங்களுக்குப் பட்டா வழங்குவது, அடிப்படை வசதிகள் வழங்குவது, தொழில் துவங்க உதவுவது என ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டுமின்றி- குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகளை அளித்து- அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான உத்தரவாத திட்டத்தைத் துவக்கி வைத்து, 4.53 கோடி ரூபாய்க்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

இதோடு நின்றுவிடாது

சமூகநீதிக்காக சமுதாயத்தை கை தூக்கி நிறுத்துவதற்காக, அடுத்தடுத்து பொருளாதார உதவி நடவடிக்கைகளைத் திமுக அரசு எடுத்து வருகின்ற நேரத்தில் அவர்களுக்கு பழங்குடியின தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும். நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக – அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்க தனது தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனித மனங்களில் வேற்றுமையை விதைக்கும் தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்துக் கட்டுவோம்!

உழைத்துப் பெறாத எதிலும் பெருமைகொள்ள ஒன்றும் இல்லை. ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை அறிவுத்தீயால் எரித்து எல்லோரிடமும் அன்பு செய்வோம்! அதற்காக உறுதியேற்போம்!

Comments are closed.

Close Search Window