கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 25-07-2023 அன்று தொடங்கி வைத்தார்.
மேலும், தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள் என்றும் கருத்தப்படுகிறது.
சுயமரியாதையுடன் வாழலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ஓராண்டுக்கு முன்னரே செயல்படுத்தி இருக்க வேண்டும். நிதிச் சூழலால் தற்போதுதான் இது பயன்பாட்டுக்கு வருகிறது. பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதாரத்தில் மேம்படவும் உதவும் இந்த திட்டத்தை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கொச்சைப்படுத்தி பிரச்சாரமும் செய்கின்றனர். அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
மகளிருக்கான மாபெரும் கொடை:
மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்.15-ம் தேதி முதல்பயன்பாட்டுக்கு வரும். இது பெண்களுக்கு திராவிட இயக்கம் வழங்கியுள்ள மற்றொரு மாபெரும் கொடை.
இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்யும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள். குடும்பத்தின் உயர்வுக்காக கடுமையாக உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் ஆக.28-ம் தேதி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும்.
இதற்காக தமிழகம் முழுவதும் 35,929 முகாம்கள் அமைக்கப்பட்டு,
விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியில் 68,190 தன்னார்வலர்களும், மகளிருக்கு வழிகாட்டுதல் வழங்க 35,925தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு கோடி பெண்களுக்கு முதல் கட்டமாக உதவித் தொகை:
மாதம் தோறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களையும் விண்ணப்பங்களையும் விநியோகித்தனர். இந்த பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பங்கள் வாங்க பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தில் பயனடைவதற்கான பொருளாதாரத் தகுதிகள் என்ன?
1.குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
2.ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
3.ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?
1.ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
2.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
3.ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.
4.ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.
5.ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது.
மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
அதாவது, 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாகப் பிறந்தவர்கள் விண்ணபிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
உதவிப் பணம் அல்ல உரிமைப் பணம்:
இதன்மூலம் மகளிருக்கு தரப்பட இருப்பது உதவிப் பணம் அல்ல. இது மகளிருக்கான உரிமைப் பணம். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு வரும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்.