Uncategorized|

மதுரைக்கு மற்றொரு அடையாளமானது கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி, மதுரை புதுநத்தம் சாலையில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு ஜன. 11-ஆம் தேதி நூலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தற்போது, ரூ. 134 கோடியில், சுமார் 2,13,334 சதுர அடி பரப்பில், 7 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளது.

சிறுவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்த நூலகம் அமையும் என அரசு அறிவித்திருந்தது. அதுபோலவே, சுமார் 4.3 லட்சம் புத்தகங்களுடன் அழகுற அமைந்துள்ளது இந்த நூலகம். மாற்றுத் திறனாளிகள் பிரிவு, மாநாட்டு அரங்கம், கலைக்கூடம் ஆகியன தரைத் தளத்தில் அமைந்துள்ளன.

முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள், அவர் குறித்து பிற அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. இவை தவிர, குழந்தைகளுக்கான அரங்கம், அறிவியல் உபகரணங்கள், நாளிதழ்கள், மாத, வார இதழ்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. 2-ஆவது தளம் தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

மூன்றாவது தளம் ஆங்கிலப் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்டதாக உள்ளது. 4-ஆவது தளத்தில் போட்டித் தேர்வர்களுக்குத் தேவையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 5-ஆவது தளம் நூலகமாக உள்ளது.
6-ஆவது தளத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

சிறப்புகள்

நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி, 6 மின்தூக்கிகள் (லிப்ட்), 6 தானியங்கிப் படிகள் (எஸ்கலேட்டர்), சுமார் 150 வாகனங்களை நிறுத்தும் வசதி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது இந்த நூலகம்.

இங்கு நூல்கள் அனைத்து டிடிசி எனப்படும் நூலக அறிவியல் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் தொடுதிரை மூலம் நூல்களைக் கண்டறியும் வசதியும் அமைக்கப்படுகிறது. இணையவழியில் புத்தகங்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாக இந்தத் தொடுதிரைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழக அரசின் இரு மொழிக் கொள்கை அடிப்படையில் தமிழ், ஆங்கில நூல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், உரை நூல்கள், திறனாய்வு நூல்கள், நவீன இலக்கியங்கள், பண்பாட்டு இலக்கியங்கள், உலகத் தமிழ் இலக்கியங்கள், நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள், திராவிட இயக்க நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், ஆங்கில இலக்கியங்கள் என லட்சக்கணக்கான நூல்கள் இங்கு வாசகர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன.

இந்த நூலகத்துக்கு 71 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 30 பணியாளர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து இங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் 15 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மற்ற பணியிடங்கள் வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் நிரப்பப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், தூய்மைப் பணிகளுக்காக 40 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரை வட்ட வடிவத்திலான முகப்புத் தோற்றம் கொண்ட இந்த நூலகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை பெங்களூரிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவப்பு செங்கல்கள், கேரளத்தின் பாரம்பரிய ஓடுகள் போன்றவை அலங்கரிக்கின்றன. நூலக நுழைவு வாயிலில், புத்தகப் பிரியரான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி புத்தகம் படிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நூலகங்கள் என்பவை புத்தகங்களால் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் மீது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் கொண்டிருந்த ஆர்வத்தையும், காதலையும், ஆழமான வாசிப்பையும், அவரது படைப்பாற்றலையும் அனைவரும் அறிவர்.

தன்னுடைய பள்ளிப் பருவத்தில் எழுதத் தொடங்கி, 94 வயது வரை ஓயாமல் எழுதியவர் கலைஞர்.
அவர் எழுதிய பக்கங்கள், 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இரண்டு இலட்சம் என்ற பெருமையுடன், அவை அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்ட இலட்சியத்தை நாடெங்கும் பரப்புவதற்காக எழுதியவை என்ற பெருமிதமும் இணைந்தே நிலைத்திருக்கிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள நூலகங்களுக்கு இணையான அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த நூலகம், தமிழகத்தில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதுடன், சங்கம் வளர்த்த மதுரைக்கு மற்றொரு அடையாளமாகவும் திகழும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Comments are closed.

Close Search Window