Uncategorized|

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பெரிய சாதனை இல்லை. அந்தத் திட்டம் கண்முன்னே நல்ல பலனை அளிக்க வேண்டும். அது சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்படியொரு திட்டம்தான், தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’. தொடங்கப்பட்ட ஓராண்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு பயனளித்திருக்கும் இந்தச் சிறப்பான திட்டம் பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடங்கிய ஆறே மாதங்களில் 50 லட்சம் பயனாளர்களைச் சென்றடைந்தது. இதற்கான வெற்றி விழாவை செங்கல்பட்டு, சித்தாலப்பாக்கத்தில் அரசு நடத்தியது.

அன்று முதல் இன்றுவரை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் மருத்துவக் குழுவினர், இடைவிடாமல் மருத்துவ சேவையை செய்து வருகின்றனர். தற்போது வரை 98 லட்சத்து 92 ஆயிரத்து 456 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். இன்னும் சில வாரங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்க உள்ளது.

வீடு தேடி வரும் மருத்துவக் குழு!

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமத்துக்கும் மருத்துவ சேவையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்’ என்ற இலக்குடன் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அவரது கனவை இத்திட்டம் நனவாக்கியுள்ளது. அதற்கான சில சாட்சிகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ குழு, 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்குத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கிறது. மேலும், அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வீட்டுக்கே சென்று வழங்கி வருகிறார்கள். அதேபோல் புற்றுநோய், பக்கவாதம் போன்ற தொற்றா நோயாளிகளின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறது. அதனால்தான் இத்திட்டத்தின் பயன் அடித்தளத்தில் உள்ள மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது.

எளிய வழியில் மக்கள் சேவை!

மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ், ஒன்றியம் மற்றும் மண்டலவாரியாக மருத்துவக் குழு பம்பரமாகப் பணி செய்து வருகிறது. இதில் பெண் செவிலியர் ஒருவர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் எனக் குழுவாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இக்குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களைக் கண்டறிந்து, அவர்களை இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கின்றனர். பின்னர், அவர்களுக்கு சிகிக்சை அளித்த பிறகு அவர்களுக்கான மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெற்று நேரடியாக வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இத்திட்டம் மூலம் பலன் பெற்று வருபவர்களில் ஒருவர்தான் சுதாகர். இவர் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். சந்தியா என்ற பெண்ணை காதல் மணம்புரிந்த இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுநீரக பிரச்னை இருந்தது, தெரியவந்துள்ளது.

ஒரு சிறுநீரகம்; வாரம் இருமுறை டயாலிஸிஸ்!

சுதாகரின் மனைவி சந்தியாவிடம் பேசினோம். ‘எங்களுக்குக் கல்யாணம் ஆகி 4 வருஷம்தான் ஆகிறது. என் கணவர் ஒரு பைண்டிங் கடையில் வேலை பார்த்துவந்தார். நாங்கள் இருவரும் காதலித்ததால், இரு குடும்பத்தினரும் எங்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தனர். நான் வீட்டு வேலைக்குச் சென்று வந்தேன். அவருக்கு கிட்னி பிரச்னை வந்த பிறகு அறுவை சிகிச்சை செய்தோம். அவரால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. மூச்சு இரைப்பதால் வீட்டில்தான் இருக்கிறார்.

எனது இரண்டாவது மகனுக்கு 2 வயதுதான் ஆகிறது. சின்னக் குழந்தை என்பதால், அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதால் என்னால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. கணவரையும் பார்த்துக் கொண்டு, குழந்தையையும் பார்த்துக் கொள்கிறேன். தற்போது அவருக்கு வீட்டுக்கே வந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்’ என்கிறார்.

பிறக்கும்போதே சுதாகருக்கு ஒரு சிறுநீரகம்தான் இருந்துள்ளது. இப்போது அந்த சிறுநீரகமும் பழுதடையும் நிலையில் உள்ளது. இதனால் வாரம் இருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டயாலிஸிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவரை அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் அளவுக்கு குடும்பப் பொருளாதாரம் இல்லை. ஒருமுறை சென்று திரும்பினால், போக்குவரத்து செலவுக்கு 1000 ரூபாய் தேவைப்படுகிறது. அதனால் சிலமுறை டயாலிஸிஸ் செய்ய முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். வீட்டில் வைத்தே சிகிச்சை அளிப்பதும் முடியாத காரியமாக உள்ளது.

ஆட்டோ செலவுக்கே 2 ஆயிரம் ரூபாய்

‘ஒருமுறை டயலிஸிஸ் செய்ய வேண்டும் என்றால் 3 ஆட்டோக்களை மாற்றிச் செல்ல வேண்டும். ஒரு ஆட்டோவுக்கான செலவே 300 ரூபாய் ஆகிவிடுகிறது. 3 ஆட்டோ மாறினால் 900 ரூபாய் சென்றுவிடும். இப்படி இரண்டு முறை சென்று வந்தால் 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை’ என்கிறார் சந்தியா.

தொடர்ந்து பேசியவர், ‘நன்றாக வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தார். திடீரென்று இரண்டு வாரம் சரியாக சாப்பாடு எடுத்துக் கொள்ளாததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அப்போதுதான் சந்தேகம் வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அது தனியார் ஆஸ்பத்திரிதான். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகச் சொன்னார்கள். மூச்சு இரைப்பதற்கும் மருத்து கொடுத்தார்கள். அது சில நாள் நன்றாக இருந்தது.

பிறகு மீண்டும் அதே பிரச்னை வந்தது. அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். மொத்தம் இரண்டு வாரம் அங்கு வைத்திருந்தோம். எல்லா சோதனையும் செய்தார்கள். அதன் பிறகுதான் இவருக்குச் சிறுநீரகம் கெட்டுப் போனது தெரிந்தது.

மக்களைத் தேடி மருத்துவம்

முதலில் கழுத்தில் டியூப் போட்டு டயாலிசிஸ் செய்தார்கள். அதன் பிறகு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வர முடியவில்லை. வீட்டையும் பார்த்துக் கொண்டு இவரையும் அழைத்துப் போக என்னால் முடியவில்லை. அதன் பின்னர், ‘வயிற்றில் டியூப் போட்டுவிட்டால் வீட்டிலேயே டயாலிஸிஸ் செய்து கொள்ளலாம்’ என்று என் கணவர் சொன்னார்.

அதற்கு 2 வாரம் சிகிச்சை கொடுத்தார்கள். எங்களுக்கு அது பற்றிய பயிற்சியைத் தந்தார்கள். அதையும் சரிவர என்னால் செய்ய முடியவில்லை. அதன்பிறகுதான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ குழு எங்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளித்தது.

இவர்கள் மட்டும் சிகிச்சை அளிக்க வீட்டுக்கு வரவில்லை என்றால் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம். முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்வோம்’ என்கிறார்.

செலவே இல்லாத திட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் சுதாகருக்கு ஒரு மாதம் டயாலிஸிஸ் செய்வதற்கு மட்டும் மொத்தம் 90 capd (Continuous Ambulatory Peritoneal Dialysis) பைகளை வீட்டுக்கே சென்று மருத்துவக் குழு வழங்கி வருகிறது. மேலும், அதனை எப்படி சுகாதார முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் சுதாகரின் மனைவிக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். அந்த ஆலோசனைகளைப் பெற்று இன்று தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார் சுதாகர்.

”முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் இந்த உதவியைச் செய்யவில்லை என்றால், இன்றைக்கு உங்கள் முன்னால் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்’ என்கிறார் சுதாகர்.

சுதாகரை தொடர்ந்து, இன்னொரு குழந்தையின் வாழ்வும் மேன்மை பெற்றுள்ளதையும் இங்கே சொல்லி ஆக வேண்டும்.

சென்னை, பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த மெஸ்மர்-பிரியதர்ஷினி தம்பதிக்குப் பிறந்த 5 வயது நிகலினாவுக்கு பிறக்கும்போதே கைக்கும் கழுத்துக்கு இடையிலான நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வலது கை செயல்படாமல் இருந்துள்ளது. இவர் பிறந்து 10வது நாளில் இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.

வலது கைக்கு உயிர் கொடுத்த அரசு

நிகலினாவின் தந்தை மெஸ்மரிடம் பேசினோம். ‘நான் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறேன். எனக்கு 2016 ஆம் ஆண்டில் கல்யாணம் நடந்தது. 2017 ஆம் ஆண்டில் சுகப் பிரசவத்தில் மகள் பிறந்தாள். ஆனால், குழந்தை வெளியேறும்போது மருத்துவர்கள் அழுத்தியதால் கை நரம்பு பாதிக்கப்பட்டு, செயல்படாமல் போனது. அதன்பின் எத்தனையோ மருத்துவமனைக்குச் சென்று தொடு சிகிச்சை, பிசியோதெரபி எனப் பல வைத்தியம் பார்த்தும் முன்னேற்றம் இல்லை’ என்கிறார்.

தொடர்ந்து தாய் பிரியதர்ஷினி பேசும்போது, ‘பிறந்தது முதலே சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. அதன் பிறகு ஒரு நண்பரின் அறிமுகத்தால் பிசியோதெரபி எடுத்தோம். லேசாக கையில் உணர்ச்சி வந்தது. அதுவும் மூட்டு வரைதான். ‘இந்தச் சிகிச்சை பயனளித்தால் தொடரலாம்’ என்றார் அவர்.

ஆனால், அதிலும் எங்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை. சாதாரண பிசியோதெரபி செய்வதற்கே அதிக செலவாகும். அதுவும் குழந்தைக்கான சிகிச்சை என்பது அதிக செலவு பிடிக்கும் மருத்துவமாக இருந்தது. என் கணவரின் வருமானம் மட்டும்தான். இதனால் சிகிச்சையைத் தொடர முடியாமல் தவித்தோம்’ என்கிறார்.

4 ஆண்டு போராட்டம்; நான்கே மாதங்களில் சாதனை

இந்தத் தம்பதி, கடந்த 4 ஆண்டுகள் வரையில் வெளியே சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. இந்தநிலையில்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ குழு இவர்களைச் சந்தித்துள்ளது.

இக்குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர் ஒருவர் வீடுவீடாகச் சென்று சோதனை செய்தபோது இந்தத் தம்பதியை அடையாளம் கண்டுள்ளார். அதன்பிறகு கடந்த 5 மாதங்களாக அரசின் இயன்முறை மருத்துவர் இலக்கியா, குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இப்போது குழந்தையின் கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொருள்களைக் கையினால் பிடிக்கும் அளவும் அதை நகர்த்தும் அளவும் முன்னேறியுள்ளதாக அவரின் தாய் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

Comments are closed.

Close Search Window